பக்கம்:அரசியர் மூவர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 119



காணவோ?’ (2191) என்று அரற்றுகிறான். அம்மட்டோடு அப்பெருந்தகை நிறுத்தவில்லை ; கோசலைமேல் ஒரு பெரிய குற்றத்தையும் சாட்டுகிறான். 'ஏன் காடு செல்லும் இராமனைக் கோசலை தடுத்து நிறுத்தவில்லை? என்பதுதான் அவன் வினா. அவ்வாறு அவள் இராமனை நிறுத்தாமல் விட்டது பெரும்பிழை என்றும் கூறுகிறான்.

"அடித்தலம் கண்டிலென் யான்என் ஐயனைப்
படித்தலம் காவலன் பெயரற் பாலனோ?
பிடித்திலிர் போலும்நீர் பிழைத்தி ரால், எனும்
பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான்."(2192)

இவ்வாறு அரற்றி வருந்த யாரால் இயலும்? இராமனுடைய போக்குக்குச் சூழ்ச்சி செய்த எவனும் இவ்வாறு கதற இயலா தன்றோ?

"கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்
முடிகுவன் அருந்துயர் முடிய என்னுமால்.” (2193)

என்றெல்லாம் வருந்தும் பரதன் எவ்வாறு சூழ்ச்சிக்காரனாய் இருக்க இயலும்? மேலும், இராமன் பிறந்த அதே குடியில் தானும் பிறப்பதா? என்று கூடக் கேட்கிறான். -

"'வரதனில் ஒளிபெற வளர்ந்த தொல்குலம்'
பரதன்என்று ஒருபழி படைத்தது' என்னுமால் (2194)

இவ்வாறு தன் கண் எதிரே துயர் அடையும் பரதனைக் கண்ட கோசலை, தன் பிழையை உடனே உணர்ந்துவிட்டாள்; தன் பிழைக்கும் கழிவிரக்கம் கொள்ளும் அந்த நிலையில் பரதனுக்கு மன அமைதி கூற வேண்டிய இன்றியமையாமையினையும் உணர்ந்துவிட்டாள்.

"புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்
குலம்பொறை கற்புஇவை சுமந்த கோசலை
'நிலம்பொறை ஆற்றலன்; நெஞ்சம் தூய்து,' எனாச்
சலம்பிறிது உறமனம் தளர்ந்து கூறுவாள்.” (2196)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/121&oldid=1496810" இலிருந்து மீள்விக்கப்பட்டது