பக்கம்:அரசியர் மூவர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 121




"'முன்னை நின்குல முதலி னோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவ' என்று வாழ்த்தினாள்
உன்ன உன்னநெஞ்சு உருகி நைகுவாள்.” (2220)

இப்பாடலின் மூன்றாம் அடி கூர்ந்து நோக்கற்குரியது. பரதனை 'மன்னர் மன்னவ' என்று ஏன் கூற வேண்டும்? எந்த அயோத்தி அரசைப் பரதன் கவர்ந்துகொண்டான் என்று அவள் மனம் வருந்தினாளோ, அந்த அரசை அவளே மனமுவந்து பரதனுக்கு இப்பொழுது தர விரும்புகிறாள். பரதனுடைய பெருமையை இப்பொழுது நேரடியாக அறிந்து கொண்டமையின், அப்பெருமாட்டி அவனை 'மன்னவ' என்றே விளிக்கிறாள்.

முதல் தேவியாம் கோசலை அறிவு, பண்பாடு, கணவனிடத்துக் காதல், கடமை உணர்ச்சி ஆகிய அனைத்திலும் முதல் இடம் பெறுபவளாகவே அமைந்துள்ளாள். வான்மீகர் கண்ட கோசலைக்கும் கம்ப நாடன் கண்ட கோசலைக்கும் கடலனைய வேற்றுமை உண்டு தமிழர்கள் தலையாய கற்புடைய ஒரு மனைவிக்கு எவ்விதக் கடமைகள் இருக்கவேண்டும் என்று நினைத்தார்களோ அவை அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவே கோசலை காட்சியளிக்கிறாள். மலை போல அடுக்கி வரினும் துயரத்தைக் கண்டு அஞ்சியோடாமலும், அதன்பொருட்டுப் பிறரைக் காரணம் உள்ள பொழுதும் இல்லாத பொழுதும் நொந்துகொள்ளாமலும் தன் கடமையை விடாது செய்யும் பெருமாட்டியாகவே கோசலை காணப்படுகிறாள். தான் எதிர்பார்த்த ஒன்று நடைபெறாத பொழுது மனத்துயர் அடைதலும், அதனை நடைபெறவொட்டாமற்செய்தவர்களைப் பழித்தலும் உலக இயற்கை. தசரதன் கைகேயியைப் பேசும் பேச்சுகளிலிருந்தே இதனை அறியலாம். ஆண்மகனாகிய தசரதன் அவ்வாறு நடந்து கொண்டுங் கூடப் பெண் மகளாகிய கோசலை முற்றிலும் வேறுவிதமாக நடந்து கொள்ளல் அறிதற்பாலது. அன்பே வடிவானவர்கள் ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/123&oldid=1496817" இலிருந்து மீள்விக்கப்பட்டது