பக்கம்:அரசியர் மூவர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இளைய மென்கொடி

 இருவகைப் படைப்புக்கள்

கம்பன் என்ற கலைஞன் படைத்த எழுநிலை மாடங்கள் இராமன், இராவணன், இலக்குவன், பரதன், சீதை போன்றவர்கள். இத்துணைப் பெரிய மாடங்களைப் படைக்கும் ஆற்றல்சால் கலைஞனாகிய கம்பனே, இரண்டங்குல உயரமே உடைய தந்தப் பதுமைகளையும் படைத்துளான். 'பெரிய கலைப் படைப்பில் மட்டுமே அவனது வன்மையைக் காட்ட வாய்ப்பு இருந்தது ; எனவே, அவற்றை ஒப்புயர்வற்ற முறையில் படைத்துவிட்டான்,' என்று யாரும் நினைத்துவிட வேண்டா. அளவால் மிகச் சிறிய படைப்புகளிலும் அவன் கலைத் திறனையும் படைப்பு வன்மையையும் நன்கு காணலாம். அவனைப் பொறுத்த வரை இவ்விருவகைப் படைப்புகளும் ஒன்று தான். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' அன்றோ? படைக்கின்ற அவனுக்கு இவை இரண்டும் ஒன்றேயாயினும், அனுபவிக்கின்ற நம்மைப் பொறுத்த வரை ஒரு வேறுபாடு உண்டு.

பெரிய படைப்புக்களை எளிதிற்காணலாம்; அனுபவிக்கலாம். இரண்டொரு நுண்மையான பகுதிகளை நாம் காணத் தவறி விட்டாலும், தீங்கு ஒன்றும் இல்லை. அதனால், கலைப் பொருளினது முழுத் தன்மை கெட்டுப் போவதில்லை. அந்நுண் பகுதிகளைப் பற்றிய சிறப்பை நாம் அறிந்து அனுபவிக்கவில்லை என்ற குறைபாட்டைத் தவிர, முழு அழகையும் அனுபவிக்க இத்தவறு குறுக்கே நிற்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/125&oldid=1496820" இலிருந்து மீள்விக்கப்பட்டது