பக்கம்:அரசியர் மூவர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ☐ அரசியர் மூவர்



மேலும் இத்துணைப் பெரிய படைப்பை அண்மையில் நெருங்கிக் காணாமல் தூரத்தே இருந்தபடியே கூட அனுபவிக்கலாம்.

மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிறிய தந்தச் சிற்பத்தைக் கண்டு அனுபவிக்க வேண்டுமாயின், தூரத்தே இருந்து கண்டு பயனில்லை. மிகவும் அண்மையில் இருந்தே காண வேண்டும். பல சந்தருப்பங்களில் 'பெருக்காடி' (Magnifying glass) கொண்டு காண நேரிடுவதுமுண்டு. அப்பொழுதுதான் அச்சிற்பத்தின் முழு அழகையும் அனுபவிக்க முடியும். சில பகுதிகளைக் காணா விட்டாலும் தவறில்லை என்று இங்கே கூற முடியாது. சிறு பகுதிகளை விட்டு விட்டால், முழு அழகையுமே இழக்கநேரிடும். எனவே, மிகவும் கவனத்துடன் கையில் கொண்ட பெருக்காடியுடன் இச்சிற்பச் சிறப்பைக் கண்டுகளிக்க வேண்டும்.

இளையவளா, மூத்தவளா?

தசரதன் மனைவியும் இலக்குவன் தாயுமாகிய சுமித்திரை இராம காதையுள் இலைமறை காயாகவே இருந்து வருகிறாள். கோசலையும் கைகேயியும் பெற்ற அளவு பாடல்கள் கூட இவள் பெறவில்லை. அதிகப்பாடல்கள் பெறாமையின் இவளுடைய சிறப்புக் குறைந்துவிட்டதாக நினைத்துவிட வேண்டா. இராமனுடைய நிழல் என்று கூறும்படி இலக்குவன் உடனுறைவதைக் காண்கிறோம். அதே போல, இராமனைப் பெற்ற தாயான கோசலையின் நிழல் என்று கூறும்படி இலக்குவனைப் பெற்ற தாயான சுமித்திரை அமைந்து விடுகிறாள். கம்பராமாயணம் முழுவதிலும் இவளைப்பற்றி வரும் பாடல்கள் ஏறத்தாழப்பத்துக்குள்ளாகவே அமைந்துள்ளன. ஒரே ஒரு முறைதான் இம்மாதரசி வாய் திறந்து பேசுகிறாள். ஆம் இவளுடைய இரண்டாவது அருமை மைந்தன் சத்துருக்கனனும் ஒரே ஒரு முறை தான் பேசுகிறான். என்றாலும் என்ன?

“பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (குறள்.649)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/126&oldid=1496822" இலிருந்து மீள்விக்கப்பட்டது