பக்கம்:அரசியர் மூவர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ☐ அரசியர் மூவர்


 என்று அவன் வியப்படைந்துவிட்டான். தாய் தந்தையருடைய பண்பாடுகள் தாமே குழந்தைக்குப் படியும் என்று கூறுவார்கள்? அவ்வாறானால், இலக்குவனுக்கு இத்தகைய மனப்பான்மை எங்கிருந்து வந்தது? எங்கிருந்து வந்தாலும், அவன் தோன்றி வளர்ந்த அவ்வருமைத் தாயின் மனத்திலும் இத்தகைய சீற்றத்திற்கு இடமே இல்லை. இவ்வாறு நினைந்த இராமன் இலக்குவனை நோக்கி இதோ கேட்கிறான். "ஐயனே, நேர்மையான நீதிக்கு மாறாமல் உன் அறிவு அமைந்திருக்கும் அல்லவா? அழியாத அறம் கெடும்படியாகவும் நன்னெறிக்கு மாறாகவும் உள்ள கோபத்திற்குச் சற்றும் இடம் கொடாதவள் உன் தாய். அவள் வயிற்றில் வளர்ந்த உனக்கு இக்கோபம் எங்கே தோன்றியது?” என்னும் கருத்துப்பட இதோ பேசுகிறான்.

“இளையான் இதுகூற, இராமன், இயைந்த நீதி
வளையா வரும்நன் னெறிநின் அறிவுஆகும் அன்றே?
உளையா அறம்வற்றிடஊழ் வழுவுற்ற சீற்றம்
விளையா தநிலத் துஉனக்குஎங்ஙன் விளைந்தது?'
என்றான்.” (1730)


'விளையாத நிலத்துத் 'தோன்றிய' அல்லது பிறந்த உனக்கு எவ்வாறு வந்தது?' என்று தோன்றிய என ஒரு சொல் வருவித்து ஈற்றடிக்குப் பொருள் கொள்ளல் நலமோ என்று நினைக்க வேண்டியுளது. பிறர் இந்த அடிக்கு “விளையாத உன் மனத்தில் எங்ங்ணம் இக்கோபம் தோன்றிற்று?” என்று பொருள் கூறுகின்றனர். 'நிலத்து' என்ற சொல்லுக்கு 'மனத்தில்' என்று அவர்கள் பொருள் கூறுகின்றார்கள். ஆனால், 'நிலத்து' என்றசொல்லுக்கு(கமித்திரை)'வயிற்றில்' என்று பொருள் கொண்டு 'தோன்றிய' என்ற ஒரு சொல்லையும் வருவித்துக் கொண்டால் பெருள் சிறந்து விடுகிறது. 'விளையாத நிலத்துப் பிறந்த உனக்கு' என்று பொருள் கொள்வது சுமித்திரையைப் பற்றி இராமன் கொண்டிருந்த கருத்தையும் அறிய இடம் தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/132&oldid=1496845" இலிருந்து மீள்விக்கப்பட்டது