பக்கம்:அரசியர் மூவர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 137


 நன்கு அறிந்தவனாகலின், தன் முடிபைக் குறிப்பால் அவளுக்கு உணர்த்த முடிவு செய்தான்.

மரவுரி தந்தவர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கையில் வைத் துக் கொண்டு, உடனே விழுந்து தாயை வணங்கினான். மரவுரியைக் கையிலேந்தி வணங்கியதால் தாய் அக்குறிப்பை அறிந்துகொள்வாள் எனக் கருதினான் மைந்தன். ஆனால், சுமித்திரை முன்னமே இது பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை அவன் அறிந்து கொள்ள வில்லை. இவ்வாறு பின்வரும் பாடலுக்குப் பொருள் கூறாமல் அவன் வாய்விட்டுக் கேட்டான் என்று கூறுவதால் ஏற்படும் சுவைக் குறைவை அறிக.

"அன்னான் அவர்தந்தன ஆதரத் தோடும் ஏந்தி
இன்னா இடர்தீர்ந்து, 'உடன்ஏகு எனஎம்பி ராட்டி
சொன்னால் அதுவே துணையாம்' எனத்தூய நங்கை
பொன்னார் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்.” (1750)


'அதுவே துணையாம் என என்ற தொடருக்கு இவ்வாறு என் தாய் கூறினால் அதுவே நலமாகும் என்று நினைத்து' என்று பொருள் கொள்ளுதல் நேர்மையானது. 'என' என்ற சொல்லுக்கு 'என்று நினைத்து' என்று ஒரு சொல் வருவித்துப் பொருள் கொள்ளுதலி னால் தவறில்லை.

முதற்பேச்சு

இலக்குவன் இக்குறிப்பை மனத்தில் வைத்துக் கொண்டு வணங்கினவுடன் சுமித்திரை பேசுகிறாள். இராமாயண வரலாற்றில் இப்பொழுதுதான் வாய் திறந்து அம்மாதரசி பேசுகிறாள். இரண்டு பாடல்கள் அவள் கூற்றாய் அமைந்துள்ளன. 'இராமன் செல்லும் அந்த வனம் உனக்கு மட்டும் செல்லத் தகாதது அன்று (உடன் செல்லலே உனக்குத் தகுதி); அந்த வனமே உனக்கு இனி அயோத்தியாகும். மிகுதியும் உன்பால் அன்பு கொண்ட இராமனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/139&oldid=1496858" இலிருந்து மீள்விக்கப்பட்டது