பக்கம்:அரசியர் மூவர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ☐ அரசியர் மூவர்



மன்னனாவான். இவ்வுலகை இராமன் பரதனுக்கு ஈந்துவிட்டுக் காடு செல்கிறான் என்பதை அறிந்தும் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் நாங்கள் உன் தாயார் அல்லேம். சீதையே உன் தாயாவாள். உடனே புறப்படு. இனி நீ காலந் தாழ்த்தலும் முறையன்று' என்னும் கருத்துப்பட,

“ஆகாதது அன்றால் உனக்குஅவ் வனம்.இவ்வ யோத்தி,
மாகாதல் இராமன் அம்மன் னவன்;'வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம்பூங் குழற்சீதை என்றே
ஏகாய்; இனிஇவ் வயின்நிற்றலும்ஏதம், என்றாள்.”
(1751)


இலக்குவன் தன்னுடைய தாய் எங்கே உத்தரவு தர மறுத்துவிடுவாளோ என்று ஐயுற்றதற்கு நேர்மாறாக, இவ்வாறு சுமித்திரை கூறிவிட்டாள். இச்சொற்களில் எவ்வளவு தூரம் அவளுடைய உள்ளக் கிடக்கையை வெளியிட்டுவிட்டாள்! தான் பெற்ற மகன் காடு செல்வதை எந்தத் தாய்தான் விரும்புவாள்? ஆனாலும், இதோ ஒரு தாய் மகனைச் செல்க என்று ஏவுகிறாளே! இது முறையா? இலக்குவன் மன நிலையை நன்குனர்ந்த தாயாகலின், இவ்வாறு பேசுகிறாள். தாமரைப்பூ நீரில் வாழும் இயல்புடையது. கொடிய பணியாயினும், கடு வெயிலாயினும், அது நீரில் நின்றால் செழித்து வளரும். ஆனால், பஞ்சுப் படுக்கையாகவே இருப்பினும், தாமரைக்கு அது ஏற்றதன்று. தாமரை மலரிடத்து நாம் கொண்ட, அன்பைத் தெரிவிப்பதற்காக அம் மலரை நீரிலிருந்து பறித்து மலர்ப் படுக்கையில் வைத்தாலும், அது வாடிவிடும். அதே போல, இராமன் உள்ள இடத்தில் செழித்து வாழக் கூடியவன் இலக்குவன். இராமன் அயோத்தியில் இருந்தாலும், வனத்திலி ருந்தாலும், அதுபற்றிக் கவலை இல்லை. இலக்குவனும் உடன் இருக்க வேண்டுபவனே தவிரத் தனித்து வாழக் கூடியவனல்லன். இதனை நன்கு அறிந்தமையின், சுமித்திரை, 'அவ்வனம் உனக்கு ஆகாததன்று,' என்று கூறினாள். இதுவரை இலக்குவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/140&oldid=1496861" இலிருந்து மீள்விக்கப்பட்டது