பக்கம்:அரசியர் மூவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18☐ ஒரு அரசியர் மூவர்


அதனைத் தீயதென்று முடிவு கூறக்கூடாது. காப்பியத்தில் காணப்பெறும் ஒரு பாத்திரத்தின் குண ஆராய்ச்சி செய்வதற்கு நடுவு நிலைமை வேண்டும். ஒரே ஆசிரியன் இயற்றிய ஒரு காப்பியத்தில் சில பாத்திரங்களை விரும்பியும், சிலவற்றை வெறுத்தும் முடிவு கூறல் தவறாகும்.

தீயோர் இரு வகையினர்

கேகயன் மடந்தையாகிய கைகேயியைப்பற்றி ஆசிரியனே பலவிடங்களிற் பேசுகிறான் ; ஏனைய பாத்திரங்களும் பேசுகின்றன. இந்த இரண்டு கூற்றுக்களையும் படிக்கின்ற நாம் நடுவு நிலைமையுடன் இக்கூற்றுக்களை ஆய்ந்து, கைகேயியின் குறைவு நிறைவுகளை முடிவு கட்ட வேண்டும். குறைவு இல்லாதவர் யாரும் இல்லை. அவ்வாறே முற்றிலும் குறைவேயுடைய நிறைவு இல்லாத மாந்தரும் இல்லை. ஆதலின், கைகேயியினிடத்தும் குறைவு உண்டு. ஆனால், அக்குறைவும் இரு வகைப்படும். இயற்கையாய் அமைந்த ஒரு பண்பாட்டால் வரும் குறைவு ஒன்று ; ஏனையது, வேண்டுமென்றே தவற்றைச் செய்து குறைவடைவது. ஒரு மனிதன் குறைவடைய வேண்டுமாயின், தவறு செய்ய வேண்டும். அவ்வாறு இழைக்கப்படும் தவறும் இரு வகைப்படும் : வேண்டுமென்றே இழைக்கப்படும் தவறு ஒரு வகை; இரண்டாம் வகையில் சூழ்நிலை காரணமாகவும் சில சமயங்களில் தவறு இழைக்க நேரிடுகிறது. முதலாவது வகை மிகக் கொடியது. கருணை இன்றி இவர்கள் செயலைக் கண்டிக்க வேண்டுவது தவிர வேறு வழி இல்லை. தமக்கு ஒன்றும் நன்மை இல்லை என்பதறிந்திருந்தும் தவறு இழைக்கும் இவ்வினத்தார், மந்தரையாகிய கூனியின் இனத்தைச் சேர்ந்தவர்.

இரண்டாவது கூறப்பெற்ற இனமே, கைகேயியின் இனம். இவ்வகையினர் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பம்.காரணமாகவே தீங்கிழைப்பர். இதுவும் குற்றம் எனினும், மன்னிக்கக் கூடிய குற்றமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வகையினர் வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/20&oldid=1320574" இலிருந்து மீள்விக்கப்பட்டது