பக்கம்:அரசியர் மூவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ☐ அரசியர் மூவர்



இன்றியமையாமை இல்லை என்க. நல்ல உறக்கத்திலுங் கூடத் தன்னைத் தொட்டவர் தன் கணவனையல்லாத பிறர் என்பதை அவள் உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்பதை அறிவுறுத்தவே, கவிஞன் 'தீண்டலும் உணர்ந்த அத்தெய்வக் கற்பினாள்' என்று கூறினான்.

இத்துணைச் சிறப்புடைய ஒர் அரச மாதேவி உறக்கத்தில் எழுப்பப்பட்டால், அவளை எழுப்பியவர் தண்டனை அடையவுங் கூடுமன்றோ? எனவே, தன் உறக்கம் கலைக்கப்பட்டமை காரணமாக அந்நங்கை கூனியின்மேல் சீற்றங் கொண்டிருந்தால் எவ்வளவு நன்மை விளைந்திருக்கும்? அவள் சீற்றத்தை அஞ்சிய கூனி திரும்பியிருப்பின், இராமகாதையே நடைபெறாமற் போயிருக்குமன்றோ? அவ்வாறெல்லாம் நிகழ விதி இடந்தரவில்லை என்று கவிஞன் கூறுகிறான். "மூண்டு எழு பெரும்பழி முடிக்கும் வெவ்வினை, தூண்டிடக் (கூனி) கட்டுரை சொல்லலல் மேயினாள்” (1450) என்று கூனியின் பேச்சுக்கு அவன் அடைமொழி கூறுவது, பின்னர்க் கைகேயிமேல் வரப்போகும் பழியின் கொடுமையைக் குறைப்பதற்கே அன்றோ? 'பெரியதோர் இடர் உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கவும், நீ அது பற்றிக் கவலை கொள்ளாமல் உறங்குகிறாயே!' என்று கூனி கூறிய சொற்களுக்குக் கைகேயி கூறிய விடை அவள் மனநிலையை நன்கு எடுத்துக் காட்டுகிறது. நன்மைந்தர்ப் பெற்றவள் "வெவ்விடம் அனையவள் விளம்ப, வேற்கனாள் 'தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் : அவ்வவர் துறைதொறும் அறம்தி றம்பலர் ; எவ்விடர் எனக்குவந்து அடுப்பது ஈங்கு? எனா

"பராவரும் புதல்வரைப் பயந்த யாவரும் உராவரும் துயரைவிட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்குஎலாம் வேத மேயன இராமனைப் பயந்தஎற்கு இடர்உண் டோ?' என்றாள்.”

(1451,1452)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/26&oldid=1495629" இலிருந்து மீள்விக்கப்பட்டது