பக்கம்:அரசியர் மூவர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ☐ அரசியர் மூவர்


 படைத்த மகனைப் பெற்ற எந்தத் தாய்தான் வருந்த வேண்டும்? தம்மையும் உயர்த்திக்கொண்டு தம்மைப் பெற்றவர்களுக்கும் 'என்ன தவம் செய்தார்களோ இத்தகைய பிள்ளைகளைப் பெறுவதற்கு!' என்ற நற்பெயரையும் வாங்கித்தரும் இச்சீரிய மைந்தர், அவரவர் வினையால் தோன்றுபவர் அல்லரோ? இவர்களை நோக்கித்தானே பொதுமறை,

“மகன்தந்தைக் காற்றும் உதவி 'இவன்தந்தை
என்னோற்றான் கொல்!' என்னும் சொல்.” (70)

என்று கூறுகிறது? இதுவரை கண்டவற்றிலிருந்து கைகேயியின் உயர்ந்த பண்பாடு எத்தகையது என்பதை உணர்ந்தோம். இனி அவளுடைய மனம் மாறும் வழியைக் காண்போம்.

கூனியின் சினம்

கோசலை பெற்ற இராமனிடம் எல்லையற்ற அன்பு பாராட்டித் தன் புதல்வனாகவே கருதிப் பேசிய கைகேயிக்குக் கூனி கூறும் விடை மிக அழகாய் அமைந்துள்ளது. .

எந்த இராமனைப் 'புவிக்கெலாம் வேதமேயன இராமன்' என்று கைகேயி கூறினாளோ, அந்த இராமனைப் பற்றிக் கூனி யாது கூறுகிறாள் தெரியுமா?

'ஆண்கள் வெட்கித் தலை குனியவும், ஆண்மை என்ற பண்பாடு மாசுறவும் 'தாடகை' என்ற பெயரையுடைய பெண்ணரசியைக் கொன்றவனாகிய இராமன்' என்று அவள் குறிக்கிறாள்.

"ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்
தாடகை எனும்பெயர்த் தையலாள்படக்
கோடிய வரிசிலை இராமன்” (1456)

இதில் வியப்பு என்னையெனில், கூனிக்கு இராமன்மேல் இருந்த விரோதத்தால் அவள் தாடகையைக்கூட நல்ல பெண் என்று கூறத் தொடங்கிவிட்டாள். இதுபற்றிக் கைகேயி கவலைப்படுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/28&oldid=1495638" இலிருந்து மீள்விக்கப்பட்டது