பக்கம்:அரசியர் மூவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 35


 லாமல் அவற்றின் உட்பொருளையும் கருத்தையும் விளக்கியவள் அவள் அல்லளோ? அவள் காட்டிய இக்காரணங்கள் உண்மை யானவைகளா என்று நினைந்துபார்க்கவும், ஆராயவும் அந்த அரசிக்குப் பொழுது இல்லையே அப்படியானால், அவள் கூறிய அனைத்தையும் தசரதன் தேவி அப்படியே நம்பிவிட்டாள் என்று தானே பொருளாகிறது? நம்பினதோடு மட்டுமன்றி, அந்நம்பிக்கையின்மேல் செயலாற்றவும் தொடங்கிவிட்டாளே ஆய்ந்து ஓய்ந்து பாராத இச்செயல்களால் யாது பயன் விளையும் என்று நினையாத இவள், அரசியாய் இருக்கத் தகுதியுடையவளா? கேவலம் ஒரு வேலைக்காரியாகிய கூனியின் சொற்களில் வைத்த நம்பிக்கையால் இவ்வளவு கேட்டையும் விளைக்கப்போகும் இவளை எவ்வாறு அரசியென்று கூறுவது? பேரறிவுடையவனாகிய தசரதன் கேவலம் வேலைக்காரிக்குச் செவிசாய்க்கும் ஒருத்தியை நம்பியா அரசியாக்கினான்? “அரசரில் பிறந்து, அரசரில் வளர்ந்து, அரசரில் புகுந்து பேரரசி ஆன”வள் செய்கை அல்லவே இது

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 433)

என்றும்,

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் -
மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள், 365)

என்றும் சாதாரண மக்களுக்குக்கூட அறநூல் சட்டம் விதிக்கிறதே! அனைவருக்கும் உரிய இச்சட்டத்தை, நாட்டை ஆளும் மன்னனும், அம்மன்னன் ஏற்றுக்கொண்டமனைவியும் மறந்துவிடுவார்களாயின், இவ்வுலகம் என்ன ஆகும்? இங்ஙணம் மறந்த அவர்கள் அரசன், அரசி என்று எவ்வாறு மதிக்கப்படுவர்?

கைகேயிசெய்த செயலைநோக்கினால், அவள் இச்சட்டத்தை மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அவ்வாறாயின், இக்குற்றம் அவளை மட்டும சாராமல், அவளைப் பெற்றுவளர்த்த கேகயனையும், அவளை மணந்துகொண்ட தசரதனையும் அல்லவோ சாரும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/37&oldid=1495656" இலிருந்து மீள்விக்கப்பட்டது