பக்கம்:அரசியர் மூவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை 39


கிடைத்தவுடன் கவிஞன் மதிப்பில் கைகேயி வீழ்ந்துவிடுகிறாள். அவள் நல்லவள் அல்லள் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. மான் என்றும் மயில் என்றும் அவளைப் புகழ்ந்த கவிஞன், அதே பாடலில் 'மூதேவி என்றும் ஏசத் தொடங்கிவிடுகின்றான். இது சற்று வியப்பாகவே இருக்கிறது. ஒரே மூச்சில் மான், மயில் என்று தொடங்கி மூதேவி என்று முடிப்பது முறையா? இவ்வாறு கவிஞன் கூற வேறு காரணம் கூறவியலாது. அவள் புறத்தோற்றத்தில் ஈடுபட்டு நின்ற கவிஞன் அடுத்து அவள் மனத்தில் கை வைத்தவுடன் தன் ஈடுபாட்டை இழந்துவிடுகிறான்.


அம்மட்டோடு நிற்கவில்லை. அவளை மூத்தவள்’ என்று பழிப்பதற்குக் காரணமும் காட்டுகிறான் அதே பாடலில். இலக்குமியாகிய சீதை வனம் புகுந்து விடப் போகிறாள் ஆகலின், அவள் இருந்த அயோத்தி வெறுமையாய் இருக்கக் கூடாது என்று நினைத்து இங்கு வந்து சேர்ந்த மூதேவி போலக் கிடந்தாள் என்றும் கூறுகிறான்.

“நவ்வி வீழ்ந்தென நாடக மயில்துயின்று என்னக்
கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்குமென்று அயோத்திவந்து அடைந்தஅம் மடந்தை
தவ்வையாம்எனக் கிடந்தனள் கேகயன் தனையை” (1494)

கைகேயி இவ்வாறு படுத்திருக்கும் நிலையில் உள் நுழைந்த தசரதன், யானை ஒன்று மானைத் துதிக்கையால் அள்ளி எடுப்பது போல எடுக்கவும், அவள் அவன் கையினின்றும் வழுவி வீழ்ந்தாள். அவன் மிகுதியும் வேண்டிக்கொண்ட பின்னர் அவன் தருவதாக முன் னர்க் கூறிய ஒன்றை இப்பொழுது தர வேண்டுமென்று கேட்டாள். சாதாரணமாகக் கேட்கக்கூடிய ஒன்றைக் கேட்பதற்கு இத்துணை முகவுரை ஏன் என்பதை மன்னன் ஆராய்ந்திருந்தால், ஒருவேளை சற்றுத் தாமதித்திருப்பான். ஆனால், அவன் மனம் இன்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்து நிற்கிறது. நீண்ட நாளாக அவன் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/41&oldid=1497072" இலிருந்து மீள்விக்கப்பட்டது