பக்கம்:அரசியர் மூவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ☐ அரசியர் மூவர்


 பொறுத்தவரை அவள் மனம் எவ்வளவு மாறிவிட்டது என்பதற்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டாகும்.

"விராவரும்புவிக்கெலாம் வேதமேயன இராமன்” என்று கூறிய அதே கைகேயியா இவள்? ஆம் அவ்விதஞ் சொல்லிய சில நாழிகைக்குள் அவன் பெயரைக் கூடக் கூற விருப்பம் இல்லாமல் 'சீதை கேள்வன்' என்று கூறும் மனநிலை ஏன் வந்தது? இவ்வாறு இவள் வெறுப்படைய இராமன் என்ன தீங்கிழைத்தான் இவளுக்கு?

அவனமாட்டுப் பரிவு காட்டும் முதல் வாக்கியம் கூறிய பிறகு இவள் இன்னும் இராமனைச் சந்திக்கக் கூட இல்லையே! ஏன் இவ்வளவு காழ்ப்பு அவன் மேல்? கூனிக்காவது இராமன்மேல் ஒரு பழைய பகைமை உண்டு. அவன் இளையனாய் இருக்கையில், விளையாட்டுத் தன்மையால் அவள் கூன் முதுகின் மேல் வில் உண்டையால் அடித்தானாம். யானையை ஒத்த கூனி இச்செயலைப் பிள்ளை விளையாட்டு என்று கருதாமல், அவன்மேல் தீராப்பகை கொண்டு விட்டாள். எனவே, வாய்ப்பு நேர்ந்த பொழுது தன் பகை முடித்துக் கொள்ள வேண்டிக் கைகேயியை ஏவி விட்டுவிட்டாள். ஆனால், இராமன் மேல் பகை கொள்ளக் கைகேயிக்கு என்ன காரணம் வந்தது? கேவலம் வேலைக்காரி கூறியதை நம்பிக்கொண்டு அவன் மேல் வைரம் கொள்வதா? அப்படித்தான் அவ்வேலைக்காரி இராமன் கெட்டவன் என்பதற்குரிய காரணம் ஏதாவது காட்டினாளா? அவனுக்குப் பட்டம் கிடைத்தால் அதனால் எற்படும் விளைவுபற்றிக் கூறிப் பரதனுக்கு அப்பட்டத்தைப் பெறுமாறு அறிவுறுத்தினாள். இதைக் கூறிவிட்டு அரசனிடம் இதற்கு உறுதி பெறும் முறையை எடுத்துக் காட்டுகையில் போகிற போக்கில் இராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரம் ஒன்றையும் பெறுமாறு கூறினாள்.

என்னே கொடுமை!

இவை இரண்டில் பரதனுக்கு முடி பெற வேண்டிய இன்றி யமையாமை பற்றிக் கூனி கூறிய காரணங்கள் கைகேயிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/44&oldid=1496175" இலிருந்து மீள்விக்கப்பட்டது