பக்கம்:அரசியர் மூவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ☐ அரசியர் மூவர்



பல சமயங்களில் மனிதன் பிழை செய்ய நேரிடுகிறது. இவற் றுட்சில அறிந்தும், சில அறியாமலும் செய்யப்படுகின்றன. அறியாமல் செய்யப்படும் பிழை வேண்டுமென்று செய்யப்படுவதன்று. எனவே, அதை எடுத்துக் காட்டினால் உடனே செய்தவர்கள் அப்பிழையைப் போக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு போக்க முன் வரவில்லையாயின், அது இரண்டாவது பிழை. இராமனை ஒரு குற்றமும் செய்யா திருக்கையில் காட்டுக்குப் போக வேண்டும் என்று கைகேயி விரும்பியது முதலாவது பிழை. இது பிழை என்று அவள் அறிந்து செய்தாளா, அன்றி அறியாமல் செய்தாளா என்பதை நாம் அறியோம். கவிஞனும் இது பற்றி ஒன்றுங் குறிக்கவில்லை. எனவே, நமது ஐயத்தின் பயனை (Benefit of the doubt) கைகேயிக்கு தந்து அவளை மன்னித்துவிடலாம் எனில், உடனே இரண்டாவது பிழையைச் செய்துவிடுகிறாள். எவ்வளவு தாழ்ந்து பணிந்து அவள் கால்களில் வீழ்ந்து தசரதன் கெஞ்சுகிறான்! எதற்காக? அவள் கேட்டவற்றுள் ஒன்றைப் பெற்றுக்கொண்டு மற்றொன்றை விட்டுத் தருவதற்காகவே.

தசரதன் வேண்டல்

"'கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்என்
உண்னேர் ஆவி வேண்டினும் இன்றே உனதுஅன்றோ?
பெண்ணே வண்மைக் கேகயன் மாதே பெறுவாயேல்
மண்ணே கொள்நீ; மற்றையது ஒன்றும் மற,’ என்றான்.”

(1522)

இந்தப் பாடலில், கண்ணை வேண்டினும், தருவேன்; என் உயிரையே வேண்டினும், அது உன்னுடையதாகும். வள்ளலாகிய கேகயன் மகளே, இந்த அரசை வேண்டுமாயினும், பெற்றுக்கொள். ஆனால், மற்றொன்று கேட்டாயே, அதை மட்டும் மறந்துவிடு' என்று மன்றாடுகிறான் அந்த மன்னன். இராமனைக் காட்டுக்கு அனுப்புதல் என்பதுதான் 'மற்றையதொன்று' என்று குறிக்கப்பட்டது. தசரதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/46&oldid=1496343" இலிருந்து மீள்விக்கப்பட்டது