பக்கம்:அரசியர் மூவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ☐ அரசியர் மூவர்


 சிந்தை கலங்கியவள்

அடுத்து நாம் கைகேயியைச் சந்திக்கின்ற இடம், கணவன் இறந்து, இராமன் காடு சென்ற பிறகு, பரதன் மீண்ட நிலையிலே தான். பாட்டன் வீட்டிலிருந்து வந்த பரதன் நேரே தாயைச் சென்று வணங்குகிறான். அவனைத் தழுவிய அவள், தன் தந்தை, தாய், சோதரிமார் அனைவரும் நலமா என வினவுகிறாள். அக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரே மொழியில் விடை தந்துவிட்டுத் 'தந்தையார் எங்கே இருக்கிறார்? என்று கேட்கிறான் அவன். அதற்கு அவள் தரும் விடை நமக்குக்கூட வெறுப்பைத் தருகிறது.

"'தானவர் வலிதவ நிமிர்ந்த தானை அத்
தேனமர் தெரியலான் தேவர் கைதொழ
வானகம் எய்தினான்;வருந்தல் நீ,'

என்றாள்.”(2145)

இவ்விடையால் நடுங்கி மயக்குற்று வீழ்ந்த பரதன், ஒருவாறு மனந்தேறிய பின்னர், "அம்மா, நீயலது பிறர் இவ்வாறு உரை செய நினைப்பரோ” என்று கூறக் கேட்டுவிட்டான். இந்நிலையில் கைகேயின் மனம் கல்லாகிவிட்டதையும், அது எந்த உணர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிற நிலையையுங் காண்கிறோம். தான் விளைத்த செயலின் எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமான பயன்களைக் கண்டு அவளே நடுங்கிவிட்டாள். அந்நடுக்கத்தால் ஒரளவு உணர்ச்சியைக்கூட அவள் இழந்துவிட்டாள் என்றே எண்ண வேண்டியுள்ளது. அன்றேல், கணவன் இறந்துவிட்ட செய்தியை இவ்வாறு கூற எந்தப் பெண்ணுக்குத்தான் மனம் வரும்! பரதனுடன் பேசுகிற நிலையிலும், அடுத்து அவளை இன்னார் என்று பரதன் குகனிடம் அறிமுகம் செய்து வைக்கும் நிலையிலும் கைகேயி நிற்கும் நிலை நம்முடைய பரிவையே தூண்டுகிறது. தன் செயலின் விளைவறியாமல் குடி இருந்த வீட்டிற்குத் தீ வைத்துவிட்ட குழந்தை போலச் செயலற்று நிற்கிறாள் அவள். அனைவரும் அவளை ஏசுகின்றனரே தவிர, அவள் அடையுந் துயரத்தில் பங்கு கொள்வார் எவரும் இலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/50&oldid=1496491" இலிருந்து மீள்விக்கப்பட்டது