பக்கம்:அரசியர் மூவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. நாடக மயில்

ம்பநாடன் தன் காப்பியத்தில் இரண்டு பெண்களை 'மயில்' என்று கூறுகிறான். இவ்வாறு கூறுவதால் குழப்பம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு மயிலுக்கும் ஓர் அடைமொழி தருகிறான். ஒருத்தியை 'நாடக மயில் 'என்றும், மற்றொருத்தியை 'மலைக்குல மயில்' என்றும் பேசுகிறான். மலைக்குல மயில் என்று அவன் பேசு வது வாலியின் மனைவியாகிய தாரையை ஆகும். இவ் அடைமொழி பொருத்தமானதேயாகும். கிட்கிந்தை என்பதே மலைப்பிரதேசமாகும். எனவே மலைக்குல மயில் என்று கூறுவதில் உள்ள பொருத்தத்தைக் காணலாம். நாடக மயில் என்று அவன் குறிப்பிடுவது கைகேயியை ஆகும். மயில் ஆடுவது இயல்பு. 'தண்டலை மயில்கள் ஆட' என்று கம்பனே பேசுகிறான். சங்கப் பாட்டிலும் ஆடுகள விறலியின் தோன்றும் என்று மயிலின் ஆட்டம் பேசப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஞானசம்பந்தரும் திருக்கேதாரப் பதிகத்தில் 'வண்டு பாட மயில் ஆட' என்று பாடுகிறார். நாட்டியமாடுவது மயிலுக்கு இயல்பாதலால் ஆடு மயில் என்றோ நாட்டியமயில் என்றோ கூறியிருந்தால் அதில் புதுமை ஒன்றுமில்லை. அவ்வாறில்லாமல் நாடக மயில் என்ற அடை கொண்ட பிரயோகம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாடகம் நடிப்பவர்கள் யாராய் இருப்பினும் தாம் யார் என்பதை மறைத்துக் கொண்டு எந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிக்கப் போகிறார்களோ அந்தப் பாத்திரத்திற்குரிய வேடத்தைப் புனைந்து நடிப்பது இயற்கை. கம்யநாடன் ஒரு பாத்திரத்தை முக்கிய மான இடத்தில் நாடக மயில் என்று குறிப்பிடுவானேயானால் அதில் ஆழ்ந்த பொருட்சிறப்பு இருக்க வேண்டும்.

மயில் என்று உருவகிக்கப்பட்ட பாத்திரம் கேகயன் மடந்தை ஆவாள். உருவகத்திற்குக் கொடுக்கப்பட்ட அடை, பொருளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/54&oldid=1496086" இலிருந்து மீள்விக்கப்பட்டது