பக்கம்:அரசியர் மூவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டு வந்த கைகேயிப் பாத்திரத்தைப் புதிய கோணத்தில் காணுமாறு கவிஞன் செய்கிறான். கைகேயி என்ற பெண் தற்காத்துத் தற்கொண்டான் பேணும் பண்புடையவள் என்றே கவிஞன் காட்டுகிறான். தற்கொண்டானைப் பேணுவதற்காக அவள் போட்டுக் கொண்ட வேடமே கைகேயி சூழ்வினைப் படலத்தில் நாம்காணும் கைகேயிப் பாத்திரமாகும் என்பதையும் இதுவரை கண்டோம். தொடக்கத்தில் கவிஞன் பயன்படுத்திய நாடகமயில் என்ற தொடரே இவ்வாறு நம்மை நினைக்கத் தூண்டுகிறது.

படலத்தின் தொடக்கத்தில் நவ்வி முதலான சொற்களால் கைகேயியைக் குறித்த கவிஞன், தசரதன் முதலிய பிற பாத்திரங்களைக் கொண்டு கைகேயியை ஏசவைத்தானே தவிர நூலாசிரியன் கருத்தாக ஒரு வார்த்தை கூட அவளை ஏசும் முறையில் அமையவில்லை. கைகேயி சூழ்வினைப் படலத்தின் இடைப்பகுதியில் வரும் சில பாடல்கள் (1540 முதல் 1553 வரை) தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளன. அப்பாடல்களில் இயற்கையும் சில உயிரினங்களும் கைகேயியின் கொடுமை கண்டு அவளை ஏசுவது போல அமைந்துள்ளன. அப்பாடல்களுள்,

'கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது
ஓர்கேடுகுழ் மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே' (1542)

இரவின் தொடக்கத்தில் புள்ளினங்கள் எல்லாம் தம்முள் கலகலவென்று ஒசை எழுப்புகின்றன. இந்த ஒலியைத் தற்குறிப்பேற்ற அணியுடன் கவிஞன் விளக்குகிறான். அப்புள்ளினங்கள் எழுப்பும் ஒலி கேகயத்து அரசனாகிய கேகயன் பெற்ற நஞ்சை, இப்படிப்பட்ட ஒரு பெருங்கேட்டைச் செய்த மிகக்கீழ்மைக் குணம் உள்ளவளை நினைத்து மனக் கொதிப்பேறி அவளை வைவது போலத் தம்முள் ஒலி எழுப்பின என்பதாம். தற்குறிப்பேற்றவணியே ஆயினும் கைகேயியை 'நஞ்சு' என்றும் கயத்தி என்றும் கவிஞன் பேசுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/60&oldid=1495855" இலிருந்து மீள்விக்கப்பட்டது