பக்கம்:அரசியர் மூவர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ☐ அரசியர் மூவர்



நிறைந்த அக்காட்சி நடைபெறும்போது தாம் அணிந்திருந்த காலணியைக் கழற்றி வெள்ளைக்காரர் வேடமணிந்து நடிக்கும் கிரீஷ் சந்திரகோஷின் மேல் அக்காலணியால் அடித்துவிட்டார். நாடக அரங்கம் அதிர்ந்தது என்றாலும் நடிகர் கோஷ், அந்தக் காலணியை துக்கி வைத்துக் கொண்டு தம்முடைய நடிப்புத் திறமைக்கு இதைவிடச் சிறந்த பரிசை வேறு யாரும் தர முடியாது என்று கூறிப் புகழ்ந்தார். மாபெரும் கல்வி மானாகிய வித்யாசாகரே தம்முடைய நண்பர் கோஷை மறந்து அவர் மேற்கொண்ட வேடத்தை உண்மை என்று நம்பி காலணியால் அடித்தது தன் நடிப்புத் திறமைக்கு கொடுக்கப்பட்ட சிறந்த பரிசு என்று கோஷ் புகழ்ந்தார்.

நடிகர் கிரீஷ் சந்திர கோவின் இந்த விளக்கவுரை நன்கு சிந்திக்கப்பட வேண்டும். கலைஞன்,இரசிகன் ஆகிய இருவருமே புறநிலை நோக்கில் தான் (objective) எதனையும் காண்கின்றனர். சில சமயங்களில் இந்த நிலை மாறித் தன்னிலை (subjective) நோக்கம் பெறுவதுமுண்டு. நாடகம் பார்த்த வித்யாசாகர் புறநிலையில் நின்று பார்ப்பதை விட்டுவிட்டு அகநிலைப் பார்வையில் அமிழ்ந்ததால் நிகழ்ந்த விளைவைக் கண்டோம். இதை நன்கு புரிந்து கொண்டால் கம்பன் பாடலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

காப்பியப் புலவனாகிய கம்பநாடன் மிகக் கூர்மையான கவனத் துடன் கைகேயி பாத்திரத்தைப் படைக்கிறான். அவள் உண்மையில் பொறுமை இழக்கவில்லை. தான் ஏற்றுக் கொண்ட வேடத்திற்கேற்பவே அனைத்தையும் செய்கிறாள் என்ற நிலையில் தான் கைகேயி சூழ்வினைப்படலத்தைத் தொடர்கிறான். கதை வளர்கிறது. மிக மிக வேகமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புறநிலையில் நின்று கதைப்போக்கைப் பாடிக்கொண்டு வந்த கம்பநாடன் திடீரென்று தன்னிலை நோக்கில் அமிழ்ந்து விடுகிறான். தன்னால் படைக்கப்பட்ட பாத்திரத்தை அது செய்கின்ற செயலைத் தன்னிலை நோக்கில் பார்க்கத் தொடங்கியவுடன் விருப்பு, வெறுப்புகள், கோபதாபங்கள் ஆகிய அனைத்தும் வந்துவிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/62&oldid=1496496" இலிருந்து மீள்விக்கப்பட்டது