பக்கம்:அரசியர் மூவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக மயில் ☐ 61

 தன்னை மறந்த நிலையில் கைகேயியை ஏசத் தொடங்கிவிடுகிறான். 'நஞ்சு' என்ற சொல்லும் 'கயத்தி' என்ற சொல்லும் இந்நிலையில்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாத்திரப்படைப்பு எவ்வளவு சிறந்துள்ளது என்பதற்கு இது ஒர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். கல்வியில் பெரியவனான கம்பன் கூட தானே படைத்த பாத்திரத்தின் வளர்ச்சியில் தன்னையே மறந்துவிடுகின்றான். மயில் அனைய கைகேயி நாடக வேடமிட்டு கொடிய கைகேயியாக நடிக்கிறாள் என்று அவன் நிர்மாணித்த கோட்டை மேல் இப்பொழுது தன்னை மறந்து கல்லை வீசுகிறான். இதை நன்கு புரிந்துகொண்டால் கைகேயி என்ற பாத்திரத்தைக் கம்பன் எவ்வாறு படைத்தான்? முதலில் ஏன் புகழ்ந்தான்? இறுதியில் ஏன் ஏசினான்? என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

கைகேயி என்ற பாத்திரத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது பொருத்தமாகும் என்று நினைக்கின்றேன். இது வரையில் கைகேயியைப் பெருங் கொடுமைக்காரியாக, கருணையற்றவளாக, பண்பற்றவளாகவே கண்டோம். தான் கொண்ட கருத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகக் கணவனை இழப்பதைக்கூடப் பெரிதாகக் கருதவில்லை என்று தான் கூறிக் கொண்டிருந்தோம். ஆனால், கம்பனுடைய பாத்திரப் படைப்பை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது கைகேயியை அவன் வேறு வகையில் அமைத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இராமன் எப்படி ஸ்திதப்ரக்ஞனாக அமைக்கப்படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக் கைகேயியும் படைக்கப்பட்டிருக்கின்றா ளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி. கூனியினுடைய சூழ்ச்சி, அவள் அந்த அடிப்படையை அறிவதற்கு ஒரளவு துணை செய்தது; அந்த அளவோடு அது நின்று விட்டது.

தசரதனைப் பொறுத்தமட்டில் ஒரு மாபெரும் தவற்றைச் செய்ய முற்பட்டு விட்டான். இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/63&oldid=1496506" இலிருந்து மீள்விக்கப்பட்டது