பக்கம்:அரசியர் மூவர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 65


தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன். இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதில் அவனுக்கு எந்த விதமான சிறப்பும், பெருமையும் இருக்கப் போவதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும், அவன் இராமனுக்குப் பட்டம் கட்டிவிட்டு உயிர் துறப்பானேயானால் வார்த்தை தவறிய பெரும் பழி அவனைச் சூழத்தான் செய்யும். ஆகவே, இந்தப் பழியிலிருந்து நீங்க வேண்டுமானால், அவன் உயிர் போவதாக இருந்தாலும் சரி அதுபற்றிக் கவலையில்லை. இந்தப் பழி பாவங்கள் அவனை அடையாதிருத்தல் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கைகேயி செயல்பட்டாள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

ஆகையினால்தான் தசரதன் எவ்வளவு எடுத்துக் கூறியும் வசிட்டன் வந்து கூறியும், கோசலை வந்து அழுதும் கைகேயி எதற்கும் அசையாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு நின்று விட்டாள். ஆகவே, இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு பார்ப்போமேயானால் கைகேயி செய்த தியாகம் மாபெரும் தியாகமாகும். இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கைகேயி இவ்வாறு நினைந்துதான், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவிற்கு வந்து கணவனைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே சர்வ பரித்தியாகம் செய்துகொண்டாள் என்ற முடிவுக்கு அரண் செய்கின்ற முறையில் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன.

பரதன் வருகிறான்; தாயிடம் பேசுகிறான்; 'தந்தை வானத் தான், அண்ணன் கானத்தான்' என்று அவள் பேசுகிறாள். அதனைக் கேட்ட பரதன் துணுக்குறுகின்றான். சிறிதும் உணர்ச்சி யில்லாமல், 'ஒருவன் கானத்தான், ஒருவன் வானத்தான்' என்று சொல்கிறாளே என்று நடுங்குகின்றான் பரதன். உடனே காரணங்கள் கேட்டறிந்தவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/67&oldid=1496709" இலிருந்து மீள்விக்கப்பட்டது