பக்கம்:அரசியர் மூவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 ☐ அரசியர் மூவர்


தார்கள் என்று குறிப்பாகக் கவிச்சக்கரவர்த்தி கதையைக் கொண்டு செல்லுகின்ற முறையில் பற்பல வெற்றிகளைப் பெற்றுவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். தசரதனைப் பழிக்கு ஆளாக்காமல், 'வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாகச் செய்து விட்டாள் கைகேயி.

"படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை”
(2371)


என்று பரதன் கூறினாலும் உண்மையில் அத்தகையவள் அல்லள் அவள். மாபெருந் தியாகத்தைச் செய்த ஸ்திதப்பிரக்ஞ மனோ நிலையில் உள்ள ஞானியாக அவளை ஆக்கிப் படைத்துவிட்டான். ஆகவே, அந்த அடிப்படையில் அவள் மனமாற்றத்தைக் குறிக்க வந்த கவிஞன்,

"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூமொழி மடமான்”
(1484)

என்று மட்டும் கூறி நிறுத்தாமல், "தூமொழி மடமான்” என்று அவளுக்கு அற்புதமான அடைமொழி சூட்டுகின்றான் கவிச் சக்கரவர்த்தி.

எனவே, அவள் கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர, உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட 'தூமொழிகள்' என்பதை

“தூ மொழி மடமான்” (1484)

என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான். ஆக இந்தக் கன்யா சுல்கக் கதையை வெளிப்படையாகச் சொல்லாமல், மறை முகமாகவே கொண்டு செல்வதில் இத்தனை பல வெற்றிகளைக் கவிச்சக்கரவர்த்தி பெறுகின்றான் என்பதை நாம் அறிய முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/80&oldid=1496749" இலிருந்து மீள்விக்கப்பட்டது