பக்கம்:அரசியர் மூவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4 முதல் தேவி கோசலை

கவிஞன் படைப்பு

காப்பியத்தில் தோன்றும் எல்லாப் பாத்திரங் கட்கும் வடிவு தரவேண்டியவனாகிறான் கவிஞன்.
சிறந்த முறையில் பாத்திரப்படைப்பு அமைய வேண்டுமாயின், கவிஞன் படைத்த பாத்திரம் என்று இல்லாமல், அவனே பாத்திரமாக அமைந்துவிட வேண்டும்.
வேறு வகையாகக் கூறுமிடத்து, அவன் படைக்கும் ஒவ்வொரு பாத்திரமாகவும் அவன் மாற வேண்டும்.

சிறிய பாத்திரமேயாயினும், காப்பியத் தலைவனேயாயினும், இவ்விதிக்கு விலக்கில்லை. சிறந்த ஒவியம் எனின், முழுத் தோற்றம் நன்கு அமைவதோடு சிறு சிறு பகுதிகளும் செம்மையாக அமைய வேண்டும் அல்லவா? சிறந்த ஒவியர் தீட்டிய ஓவியங்களில் ஒவ்வொரு வளைவிலும் ஒவ்வொரு கோட்டிலும் அவ்வோவியரின் தனிச் சிறப்பைக் காண முடியும் என்று கூறுவர். ஒவியத்திற்கு மட்டும் அல்லாமல், கவிதைக் கலையிலும் இக்கூற்று உண்மையாகும். பிற்காலக் கவிஞர் தம் பாடலைப் பிறர் அறிந்துகொள்ளப் பாட்டின் இறுதியில் 'முத்திரை அடி' என்ற ஒன்றை வைத்துப் பாடுவர். அதே போல முத்திரை அடி இல்லாவிடினும், கம்பனுடைய ஒவ்வொரு பாடலிலும் அவனுடைய தனித் தன்மையைக் காண முடியும். கம்பனைப் போன்ற பெருங்கவிஞர்களிடத்தில் நாம் இம்முறையை எதிர் பார்ப்பதில் தவறு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/81&oldid=1496756" இலிருந்து மீள்விக்கப்பட்டது