பக்கம்:அரசியர் மூவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ☐ அரசியர் மூவர்


 முதல் அடியிற் கூறிய கவிஞன், இரண்டாம் அடியில் வந்தவை இரண்டைக் குறிப்பிடுகிறான். இதில் சிறப்புயாதெனில், மகன் வரவை எதிர்பார்த்து நிற்கும் தாயானவள், மகனுடன் இரண்டு பொருள்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அப்பொருள்கள் வரவில்லை; அவற்றிற்கு மறுதலையாக அவள் எதிர் பாராத பொருள்கள் வந்தன என்பதே சிறப்பாகும். இன்னும் ஒரு சிறப்பும் இதில் உண்டு. கண்ணாற்காணக் கூடிய இரண்டை (கவரியும் குடையும்) அவள் எதிர்பார்த்தாள் மகனுடன். இவற்றுள் கவரி அவன் முன்னிற்பவரால் வீசப் பெறும் குடை பின்னிற்பவரால் பிடிக்கப்படும். இவை இரண்டுமே கண்ணால் காணக்கூடியவை. ஆனால், இப்பொழுது மகன் வருகிற நேரத்தில் கண்ணாற் காணக்கூடாதவை இரண்டு முன்னும் பின்னும் வருகின்றன. அவை யாவை தெரியுமா? இதோ கவிஞன் கூறுகிறான். “இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக” என்ற அடியால், வருகின்ற மகனின் முன்னும் பின்னும் வருகிறவர் யார் என்பது தெரிகிறதல்லவா? கவரிக்குப் பதிலாக விதியும், குடைக்குப் பதிலாக அறக் கடவுளும் வருகின்றனராம்.

கவரி எவ்வாறு செல்லும்? மேலும் கீழும் வீசிக் கொண்டு தானே கவரி செல்லும்? அதே போல் விதியும் ஏதோ செய்துகொண்டு தான் வருகிறதாம். அது செய்யும் செயலைத்தான் கவிஞன் இழைக்கின்ற என்ற சொல்லால் குறிப்பிடுகிறான்.

தான் செய்யும் செயலைப் பிறர் அறியாத வகையில் செய்தலை இழைத்தல் என்று கூறலாம். முடிசூட வேண்டிய அரசகுமாரனைக் காடாள அனுப்பிய விதி தான் நினைத்த செயலை முடித்துவிட்ட பெருமித்துடன் தலை தூக்கி முன்னர் நடப்பதைக் கவிஞன் 'விதி முன் செல்ல' என்று குறிப்பிட்டான். ஆனால், இராமன் பின்னர் வருகிற 'அறக் கடவுள்' விதியைப் போலச் செருக்குடன் வர வழி யில்லை அன்றோ? எனவே, இராமன் போய்விடுகிறபடியால் இனித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/92&oldid=1496772" இலிருந்து மீள்விக்கப்பட்டது