பக்கம்:அரசியர் மூவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ☐ அரசியர் மூவர்


 தழைக்கும் பயிருக்குத் தண்ணீர் இல்லாமற் செய்வது போல, அவளுடைய தழைப்புக்குக் கிரீடம் இல்லாமற்போய்விட்டது. தண்ணீர் அற்ற பயிர் கருகிவிடுதல் போல, அவள் மனமும் மெளலியற்ற மைந்தன் தலையைக் கண்டவுடன் சாம்பிவிட்டது என்றதைக் குறிப்பால் அறிவிக்கவே, "தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் வந்தான்," என்று கவிஞன் கூறுகிறான்.

மேலும் ஓர் அழகு இப்பாடலில் புனைந்துள்ளது. தூரத்தே இருந்து பார்ப்பவர்க்கு முதலில் தெரிவன கவரியும் குடையும் அல்லவா? இன்னும் நெருங்கி வரும் பொழுதுதானே தலையில் கவித் திருக்கும் முடி தெரியும்? அந்த முறை பற்றியே கவிஞன் கவரியையும் குடையையும் முதலில் கூறி, முடியை மூன்றாம் அடியிற் கூறுகிறான்.

இதுவரை மகனைக் கண்ணாற் காணுமுன் இருந்த தாயின் நிலையைக் கண்டோம். இவ்வாறு மைந்தனைக் காணுமுன்னர் ஒரு தலையாக தாய்க்கு ஏற்படும் மனநிலைகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டத் தலைசிறந்த கவிஞன் ஒருவனுக்கே இயலும். முன் இரண்டு அடிகளில் அவள் எதிர்பாராதவற்றைக் கூறியதை மேனாட்டுத் திறனாய்வாளர் மிகவும் போற்றுவர். இதனை 'அவல நகை' Grim Humour என்று கூட ஓரளவு குறிப்பிடலாம். மூன்றாம் அடியில் உள்ள 'என்று என்று' என்ற இருசொற்களும் காத்து அலுத்து மீட்டும் எதிர்பார்க்கும் தாய் மனநிலையை நன்கு காட்டுகின்றனவல்லவா?

எதிர் நோக்கும் தாய்

மகன் வரவைத் தாய் எதிர்பார்க்கிறாள். பெற்றதாய்க்கன்றோ பிள்ளை அருமை தெரியும்? அதிலும், பேரரசனாக முடி சூடிக் கொண்டு வரப் போகிறான் என்று தழைக்கின்ற உள்ளத்தாளாகக் காத்து நிற்கும் கோசலை முன்னர், மழைக்குன்றம் அனையானாகிய இராமன் ஒரு தனியனாய் வருகிறான். தூரத்தே வரும்பொழுதே அத்தாய் மகன் வரவைக் கண்டுவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/94&oldid=1496775" இலிருந்து மீள்விக்கப்பட்டது