பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

உரை : 64

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

நாள் : 09.09.1970

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூவராகன் மன்னிக்கவும் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றும், ஏனைய கட்சிகளின் சார்பில், குறிப்பாக இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் கண்டனத் தீர்மானம் ஒன்றும் இந்த மாமன்றத்திலே வைக்கப்பட்டு அந்தத் தீர்மானங்களின் மீது 36 மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதற்கு முன்பு ஒருமுறை நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் இங்கே கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் 50 பேர்களாக இருந்தார்கள். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, அவர்கள் மீது நம்பிக்கையில்லை என்று எட்டு பேர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டார்கள். இப்போது மிச்சமிருக்கும் 42 உறுப்பினர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வந்திருக்கின்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று எடுத்துக் காட்டுவதற்கு அவர்களுக்கு எந்த அளவு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு எங்கள் மீது இந்த நாடும், இந்த மன்றத்திலே உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களும் நம்பிக்கை கொள்ளுகிறார்கள். மேலும் நம்பிக்கை கொள்ளுவார்கள், நம்பிக்கை கொள்ளுவதற்கான காரணங்கள் இவை இவை என்று எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு அளிக்கிறது.