126
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கிளர்ச்சியில் போலீசார் தடியடி நடைபெற்றது. ஏழு பேர்களுக்குப் பலத்த காயம். பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று கேரளச் சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள், 1300 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் அச்சுத மேனன் ஆட்சியில்.
அச்சுதமேனன் அவர்கள் என்ன என்ன சொன்னார்கள்? துரதிருஷ்டவசமான நிகழ்ச்சிகளின் காரணமாகப் போலீஸார் சில இடங்களில் தடியடிப் பிரயோகத்தையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொள்ள நேர்ந்தது. ஏதேனும் ஒரு அரசியல் கட்சி வன்முறையில் ஈடுபடும்படி வேண்டுகோள் விட்டால், அதற்குத் தலைமை தாங்கவும் செய்தால் அதை அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது என்று சொன்னார். கேரளாவின் முதல் அமைச்சர், வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அங்கே அப்படி சொல்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கிற வலதுசாரி கம்யூனிஸ்டு நண்பர்கள் நாங்கள் வன்முறையில் ஈடுபட்டால் எங்களை அடக்கலாமா, ஒடுக்கலாமா என்று கேட்கிறார்கள்.
அது மாத்திரமல்ல. குடிகிடப்புக்காரர்கள் ஆளுக்கு 10 செண்டு நிலத்தை வேலி போட்டுக்கொண்டார்கள். ஆளுக்கு 10 செண்டு நிலத்தை எடுத்துக் கொண்டார்கள். இடது கம்யூனிஸ்டுகள் அப்படி வேலி போட்டுக் கொண்டார்கள். வலதுசாரிக் கம்யூனிஸ்டு அதை அங்கே எப்படி அணுகியிருக்கிறது. அந்த ஆட்சி எப்படி அணுகியிருக்கிறது? 50,000 வழக்குகள் பதிவு. இங்கே 10,000 பேர்கள் என்று சொன்னார்கள். திரு. நல்லசிவன் அவர்கள் அதில் 3000 பேர்கள் அவர்களே அல்ல, வேறு சாலையில் இருந்தவர்களைப் பிடித்து விட்டீர்கள் என்று சொன்னார்கள். சரியாகக் கணக்குத் தெரியாது. 10,000 பேர்கள் என்று அவர்கள் பெருமையோடு சொன்னார்கள். 50,000 பேர்களின் மீது வலதுசாரி கம்யூனிஸ்டு ஆட்சி வழக்கு போட்டது. 1200 பேர்கள் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளானார்கள். போலீஸ் முகாமில் 200 பேர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். இவைகளையெல்லாம் இங்கிருந்து வெளியிடப்படுகிற தீக்கதிர் என்ற பத்திரிகை 23-8-1970 அன்று எழுதியிருக்கிறது என்பதையும் நான் கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.