பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கையிலே துப்பாக்கியையே தூக்கமாட்டார்கள், தங்கள் கடமையைச் செய்யமாட்டார்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது நீதி விசாரணை வைத்திருக்கிறோம். நாற்பது நாள் நடைபெற்ற அமளி, ரத்தப்புரட்சி, அப்படிப்பட்ட முதுகுளத்தூர் சம்பவத்திற்கு ஒரு நீதி விசாரணை வைக்கப்பட்டதா? காமராஜ் தலைமையில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபை இதை மறுத்துவிட்டது என்பதையும் நான் இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : சபாநாயகர் அவர்களே, நான் அன்றும் ஆளும் கட்சி கொறடாவாக இருந்தேன். நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தி.மு.க. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தார்களா என்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அவர்களுக்கு பரிந்து பேசுகின்ற முதல் அமைச்சர் அவர்கள் அப்பொழுது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து, வோட்டுப் போட்டிருக்கலாமே? அவர்கள் அப்பொழுது அப்படிச் செய்யவில்லையே?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நீதி விசாரணை வைத்தார்களா என்று நான் கேட்கிறேன். காமராஜ் அவர்களின் மீது மாத்திரம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருக்கிற காரணத்தினால். அண்ணா அவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்கள். அப்பொழுதே சொன்னார்கள். நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, ஆகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடுநிலைமை வகிக்கிறேன் என்று குறிப்பிட்டு, இறுதியாகப் பேசும்பொழுது நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். அப்பொழுது நீதிவிசாரணை நீங்கள் வைக்க வில்லையே என்று நான் கேட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வோட்டு அளிக்கவில்லையே என்று அவர் கேட்கிறார். நீதி விசாரணை வைக்கவில்லை என்ற விவரத்தைச் சொல்லியிருக்கிறேன் நான்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : முறைப்படி நீதி விசாரணை வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது நீங்கள் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் பேரில் வோட்டுப்போட்டிருக்கவேண்டும்.