146
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
தொழிலாளர் கிளர்ச்சிகளை அரசு அடக்குவதாக திரு. சங்கரய்யா அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். இந்த அரசு முதலாளிகளின் பக்கம் போகிற அரசு என்றும் குறிப் பிட்டார்கள்.
பஸ் முதலாளிகள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தவுடனே இந்த அரசு அவர்கள் பக்கம்போய் “நீங்கள் சொல்கிறபடியே ஆகட்டும். உங்கள் கோரிக்கைக்கு இணங்குகிறோம்" என்று சொல்லவில்லை. அவசரச் சட்டம் போட்டு அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது செய்ததில் இருந்தே இந்த அரசு முதலாளிகளின் பக்கம் கூட்டுப் போகவில்லை என்பதை திரு. சங்கரய்யா அவர்களே தம் மனச்சாட்சிப்படி உணர்வார்கள் என்பதை அவரிடத்தில் நான் கொண்டிருக்கிற நட்பு உரிமை காரணமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
தொழில்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு வைதிக
மனப்பான்மையைக் காட்டவில்லை. தொழில் வளம் பெருக வேண்டும். தனியார் முதலீடு செய்கிறார்கள், அரசு முதலீடு செய்கிறது. இரண்டும் இணைந்த ஜாயிண்ட் செக்டார் வேண்டுமென்று விரும்புகிறோம். இதைச் சொன்னால் நாங்கள் எங்கோ உள்ள தொழில் அதிபர்களை அழைப்பதாக - மாதவன் வடநாடு சென்று தொழில் அதிபர்களோடு குலாவுகிறார் என்பதாகக் கூறுகிறார்கள்.
திரு. சங்கரய்யா அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களது கட்சியைச் சேர்ந்த இ.எம்.எஸ். அவர்கள் அவர்களது மாநிலத்திலே வந்து தொழில் ஆரம்பிக்க பிர்லாவை அழைத்திருக்கிறார். பிர்லாவை இ.எம்.எஸ். அழைத்தார் என்றால் தன் மாநிலத்தில் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக. ஒரே கொள்கையில் பிடிவாதமாக இல்லாமல் மாநிலத்தில் தொழில் பெருக வேண்டும், மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று செய்கிற முயற்சிகளை நாம் கேலி செய்யவோ, கிண்டல் செய்யவோ அவசியம் இல்லை. அதுபோன்ற முயற்சிகள் பாராட்டப்படத்தான் வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.