பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தேவை. பட்டிக்காட்டில் இருக்கிற பாமர மக்கள், கண் பழுதுபட்ட பாமர மக்கள், பழுதுபட்ட கண்ணொளியைப் பெறுவதற்கு இப்படிப்பட்ட ஒரு பாதை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதிக அளவில் விளம்பரம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எடுத்த கணக்கின்படி 10 லட்சம் பேர் கண்ணொளி மங்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள். இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர்களுக்காவது கண்ணொளி வழங்குவது என்கிற தீவிர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனத்துணிவோடு ஜூன் 3-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஜூன் 3-ஆம் தேதி துவங்கிய திட்டம்-இதுவரை கண்ணொளி வழங்குகிற முகாம்களை 26 இடங்களில் நடத்தியிருக்கிறது.

திரு.ஆர்.பொன்னப்ப நாடார் : கண்ணொளி வழங்குவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்காக எங்கள் ஜில்லாவில் நிதி வசூலிக்கப்பட்டது. எந்த முறையில் வசூலிக்கப்பட்டது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியும். வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு, எத்தனை பேர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள் என்று பார்க்கவேண்டும். நடுவில் அந்த நிதி சோர்ந்துவிடக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நல்ல வேளை, கண்ணொளி வழங்குவதிலே ஆட்சேபணையில்லையென்று சொன்னதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிதியைப்பற்றிச் சொல்கிறேன். இந்த 26 முகாம்களில் புற நோயாளிகளாக (Out patient) சிகிச்சை பெற்றவர்கள், கண்ணுக்குச் சிகிச்சை பெற்றவர்கள், 1,22,555 பேர். கண்ணை அறுவை செய்துகொண்டு சிகிச்சை பெற்று கண்ணாடி வழங்கப் பெற்றவர்கள் 19,697 பேர். என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கண்ணொளி வழங்க வேண்டுமென்று கேட்டு, யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு அல்ல, இன்றைக்கு, இதுவரையிலே கிடைத்திருக்கிற நிதியினுடைய மொத்த தொகை ரூ.50 லட்சம். நிதியாகக் கிடைத்திருக்கிறது இந்த நல்ல காரியத்திற்கு. இதிலே இந்த 19,697 பேருக்கு அறுவை சிகிக்சை செய்து கண்ணாடி வழங்கவும், 1,22,555பேருக்கு கண் சிகிச்சை புற நோயாளிகளாக பாவிக்கப்பட்டு சிகிச்சை செய்யவும் இதுவரையிலே ரூ.11 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. என்னுடைய பிறந்தநாள் அடிப்படையிலே சேர்க்கப்பட்ட நிதியென்ற காரணத்தினால் அது