206
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
முன்னேற்றக் கழகம் மக்களுடைய செல்வாக்கை இழந்து விட்டது. ஆகவே அந்தக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறங்க வேண்டும் என்று டாக்டர் ஹாண்டே அவர்களும், பொன்னப்ப நாடார் அவர்களும் விவாத நேரத்தில் எடுத்துச் சொன்னார்கள். காரணம், உங்களோடு இருந்த கட்சிகளெல்லாம் பிரிந்து போய் விட்டன. ஆகவே நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள். உங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கில்லை என்றெல்லாம் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வேன். சில கட்சிகள் போய் விட்டன. ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இவர்கள் போய் விட்டார்கள், நான் மறுக்க வில்லை. வீட்டில் குழம்பு வைக்கின்றோம். அந்தக் குழம்பிலிருந்து ஒரு கத்தரிக்காய் அல்லது ஒரு வெண்டைக்காய் துண்டு வெளியே விழுந்து விட்டால், குழம்பை எடுத்து அப்படியே கொட்டிவிட மாட்டோம். அதைப்போலத்தான் 71-ல் குழம்பு வைத்தோம். அந்தக் குழம்பில் முஸ்லீம் லீக் புளியாக இருந்தது. பார்வேட் பிளாக் காரமான கட்சி, ஆகவே காரமான மிளகாயாக இருந்தது. தமிழரசுக் கழகம் சின்னக் கட்சி என்று சொன்னாலும் உப்பாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் வைத்த குழம்பில் கத்தரிக்காயாக, அல்லது வெண்டைக்காயாக இந்திரா காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. பரிமாறுகிற நேரத்தில் இரண்டு துண்டு கீழே விழுந்து விட்டது. அதற்காக புளியும், உப்பும், காரமும் இன்னும் வேறு பண்டங்கள் இருக்கின்ற குழம்பைக் கொட்டிவிட வேண்டுமா? வீட்டிலே குழம்பு வைத்துச் சாப்பிட்டு பழக்கமுள்ள, ஹாண்டே அவர்கள், பொன்னப்ப நாடார் அவர்கள், அவர்கள் வைக்கவில்லை, வீட்டில் வைத்த சாப்பாட்டில் இதை உணராமல் இல்லை. ஆகவே, இரண்டு துண்டு பதார்த்தங்கள் கீழே விழுந்துவிட்டன என்பதற்காக சமைத்தவை முழுவதையும் கொட்டிவிடு என்றால் முடியாது.
டாக்டர் ஹாண்டே அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். இப்போது முன்னேற்றக் கழகத்திலிருந்து போய் விட்டார். எம்.ஜி.ஆர். மட்டும் போகவில்லை; அவர் 50 சதவீதம் ஓட்டு வாங்கித் தரவில்லையா என்றும் சொன்னார். அது எவ்வளவு தவறான கருத்து என்பதை விளக்க விரும்புகிறேன்.
1957-ல் கழகம் போட்டியிட்ட இடங்கள் 117. அப்போது எம்.ஜி.ஆர். இளமை முறுக்குடன் 'மதுரை வீரன்' படம் நடந்து,