கலைஞரின் சட்டமன்ற உரைகள்
235
பேர்களைப் பிடித்திருக்கிறது. கோவையில் 13 பேர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 பேர்கள் இதுவரையில் பாதுகாப்புச் சட்டத்தின்படி பிடிக்கப்பட்டிக்கிறார்கள். இதற்கு முன்பே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுந்தது.
இந்தியாவிலேயே பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பதுக்கல்காரர்களையும் கள்ளக்கடத்தல்காரர்களையும் பிடித்திருக் கிற மாநிலம் நம்முடைய தமிழக மாநிலம் ஒன்றுதான் என்று கருதுகிறேன். வேறு மாநிலங்களும் இருக்கக்கூடும் என்று சொன்னால் நான் திருத்திக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன் ஒருவேளை விவரமின்றிச் சொல்லக்கூடும். இந்தச் சட்டப்படி நமது மாநிலத்தில் இன்றையதினம் 16 பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்வேன், திரு.மணலி அவர்களுக்கும், மற்றவர்களுக்கும், கள்ளக் கடத்தல்காரர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும், பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்களைப் பிடித்து சிறையில் அடைக்க இந்த அரசு நிச்சயமாகத் தயங்காது, தயங்காது என்று உறுதியாகக் கூறுவேன். அவர்களைவிடச் சமுதாய விரோதிகள் இப்படிப்பட்ட நேரத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.
நமது நண்பர் திரு.வெங்கடசாமி அவர்கள் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதிகாரிகளையும், மற்றவர்களையும் கண்டிக்கிறீர்கள். ஆனால் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் சில விவகாரங்களில் தலையிடுகிறார்கள். அப்படித் தலையிடுவது சரியா? அப்படித் தலையிடுவது நிறுத்தப்படவேண்டாமா? என்று கேட்டுவிட்டு, “நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடைய மகாநாட்டில் பேசும்போது ஒன்றைக் கூறினீர்கள்' என்பதாகவும் சொல்லி யாரும் தலையிடக் கூடாது என்று சொல்லியிருப்பதில் இருந்து இதுவரை தலையீடு இருந்திருக்கிறது என்பதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற வாதத்தை நண்பர் வெங்கடசாமி அவர்கள் நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகின்றபோது எடுத்துச் சொன்னார்கள். நான் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் குறிப்பிட்டது, இந்த அவைக் குறிப்பிலும் ஏறவேண்டும் என்பதற்காக இங்கேயும் குறிப்பிடுகிறேன்.