பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அப்படி நடந்துகொள்ளவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்வேன்.

று

இன்று மிக முக்கியமாகப் பேசப்பட்ட மற்றொன்று மதுவிலக்குப் பிரச்சினை. மதுவிலக்கை ரத்து செய்துவிட்டதாக சிலர் சொன்னார்கள். அந்த வார்த்தையைத் திருத்தமாகப் பயன்படுத்துவது நல்லது. மதுவிலக்கை இந்த அரசு ஒத்தி வைத்திருக்கிறது என்றுதான் சொன்னேனே அல்லாமல், ரத்து செய்து விட்டது என்று நான் சொல்லவில்லை. இன்றைக்கு எதிர்த்தரப்பிலே அமர்ந்திருக்கிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர், அந்தக் கட்சியினுடைய தலைவர் உட்பட, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது, என்ன நடந்தது? கோயம்புத்தூர் பொதுக் குழுவிலே, மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத் தவிர, இப்போதுள்ள நிலைமையில் வேறு வழியில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தக் கட்சியினுடைய தலைவரே அதை விளக்க ஒரு மணி நேரம் பொதுக் குழுவில் பேசி, அதுவும் போதாது என்று ஆனந்த விகடன் பத்திரிகையிலே “ஏன் முதலமைச்சர் இந்த முடிவெடுக்க நேரிட்டது?” என்பதை விளக்கிப் பல கட்டுரைகளும் எழுதி, அதற்குப் பிறகு நாம் மதுவிலக்கை ஒத்தி வைத்தோம்.

இந்த அரசு எதிலும் விடாப்பிடியாகத்தான் இருக்கும், சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்ளாது என்று யாரும் நினைப்பதற்கு இடம் இல்லாத வகையில், எவ்வப்போது குறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் இந்த அரசு அவற்றைத் திருத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு பெரிய அடையாளம்தான், ஒத்தி வைத்த மதுவிலக்கை மீண்டும் கொண்டுவாருங்கள் என்று குரல் எழுப்பியதும், தமிழ் நாட்டு மக்களுடைய குரலை மதித்து இன்றைக்கு முதல் கட்டமாகக் கள்ளுக் கடைகளை எல்லாம் மூடுவோம் என்று அறிவித்திருக்கிறோம்.

கள்ளுக்கடைகளை மூடிவிட்டால் போதுமா, சாராயக் கடைகளை மூட வேண்டாமா என்றால், சாராயக் கடைகள் எப்போதுமே இருந்துவிடும் என்று யார் சொன்னார்கள்? அவையும் மூடப்படும். முதல் கட்டம் என்று சொல்லுகிறபோதே,