பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், மற்றும் தோழமை கட்சிக்காரர்கள், இவர்கள் எல்லாம் பேசுகின்ற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, என்னென்னத் தவறுகளை செய்தது என்பதையெல்லாம் சுட்டிக் காட்டுவதற்குத்தான் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தங்களுடைய நேரத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால் ஒன்றை நான் நன்றி உணர்ச்சியோடு பாராட்டு வேன். அவர்களுடைய பேச்சிலே பெரும் பகுதி, இந்த அவைக்கு அவர்கள் சொல்லவேண்டிய அறிவுரைகளை, தர வேண்டிய எச்சரிக்கைகளை ஆளும் கட்சிக்கு தோழமைக் கட்சிக் காரர்களும், மற்றுமுள்ள எதிர்க்கட்சிக்காரர்களும் தந்தமைக்காக நான் அவர்களுக்கு எல்லாம் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏற்கனவே இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தங்களால் முடிந்த அளவுக்குத் தாக்கினார்கள். அதற்காகவாவது குறைந்த பட்சம் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த எனக்கு ஒரு நன்றியாவது தெரிவித்திருக்கலாம். அதைக்கூட அவர்கள் தெரிவிக்க மனம் இல்லாமல் போய் விட்டார்கள் என்பதை எண்ணி நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.

ஒரு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்பதை நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, இன்றைக்கு ஆளும் கட்சியிலே இருக்கின்றவர்கள் அன்றைக்கு எடுத்த முயற்சிகளை யெல்லாம் கடந்த கால வரலாறு நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1972 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திலே ஒரு அமளி தோன்றி, அதன் காரணமாக ஒரு பிளவு ஏற்பட்டு, அதன் பிறகு, அந்த அடிப்படையில் நடைபெற்ற வன்முறைச் சம்வங்கள் நாட்டில் எந்த அளவிற்குப் பெருகின. எத்தனை பேருந்துக்கள் உடைக்கப்பட்டன?