422
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இவர்களுடைய திறமை அவருக்கு நன்றாகத் தெரியும் வரதட்சணை ஒழிப்பு, மரம் நடுதல், குடும்பக் கட்டுப்பாடு, தீண்டாமை, அறியாமை ஒழித்தல் இவைகளை நாங்கள் வரவேற்கிறோம். இவைகள் எல்லாம் பெரியார் சொன்ன திட்டங்கள்தான்” என்று எனது அருமை நண்பர், இன்றைய நிதி அமைச்சர் மனோகரன் அவர்கள் பேசி அது அப்போது ஏடுகளிலே வந்து - அவர்கள் கட்சி ஏடுகளிலே வந்த குறிப்பைத் தான் நான் இங்கே படித்துக் காட்டினேன்.
ஆகவே நான் மீண்டும் சொல்லுகிறேன். 20 அம்சத் திட்டமானாலும் சரி, அல்லது 5 அம்சத் திட்டமானாலும் சரி திட்டங்கள் மக்களுடைய நல்வாழ்வுக்கு தேவை என்கின்ற வகையில் நாங்கள் அன்றைக்கும் எதிர்க்கவில்லை இன்றைக்கும் எதிர்க்கவில்லை. அவைகளை நிறைவேற்ற மக்களுடைய உரிமைகளைத் தட்டிக்கழித்துவிட்டு, உரிமையைக் கேட்பவர் களின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, காலையிலே பேராசிரியர் கூறியதைப்போல ஒரு சர்வாதிகாரச் சூழ்நிலையில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துவிட்டு, நிறைவேற்ற வேண்டுமா?
பாசன வசதியைப் பெருக்க நெருக்கடி நிலைக்கு என்ன தொடர்பு? அதைப்போலவே மின் விளக்குகளை அதிகப்படுத்த நெருக்கடி நிலைக்கு என்ன தொடர்பு? வருமான வரியை 6,000 ஆண்டு வருமானத்திற்கு என்ற உச்ச வரம்பை 8,000 ரூபாய் என்று மாற்றுவதற்கும் நெருக்கடி நிலைக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளைத்தான் அன்றைக்குக் கேட்டோமே அல்லாமல் 20 அம்சத் திட்டத்திற்கும், 5 அம்சத் திட்டத்திற்கும் அன்றைக்கும் விரோதிகள் அல்ல, இன்றைக்கும் விரோதிகள் இல்ல. ஆனால் அவசர கால சட்டத்திற்கு, அன்றும் சரி, இன்றும் சரி, என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் விரோதமாக இருக்கும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற, சர்வாதிகாரத்தைப் புறங்கான திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தயாராக இருக்கும் என்பதை நான் மிக, மிக திட்டவட்டமாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.