பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

முதலமைச்சர் பதில் அளிக்கிற நேரத்தில் எங்களுடைய கொள்கை, இதிலேயிருந்து நழுவ மாட்டோம் என்று சொன்னார்.

ஊழல் பலவிதம். கட்சிக்குக் கட்சி பாரபட்சம் காட்டுவது கூட ஊழல்தான். ஆளுங்கட்சி தலையீடுகூட ஊழல்தான். ஒரு உதாரணம் சொல்கிறேன்; சின்ன உதாரணம் சொல்கிறேன். 1979 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 12ஆம் நாள் அன்று ஜே-1 சைதாப்பேட்டை காவல் நிலைய சரகத்தில் உள்ள காவலர்கள் மிஸ்ஸி என்ற ஒரு பெண்ணைக் கைது செய்கிறார்கள். ஏன் தெரியுமா? சைதாப்பேட்டை ஆத்துச்சேரியில் 28ஆம் எண் வீட்டில் மணியினுடைய மனைவி மிஸ்ஸி என்பவளை சாராயம் விற்றதாக சைதை உதவி ஆய்வாளர் அச்சுதன்நாயர் கைது செய்து அவரிடமிருந்து சாராயம், விற்கப் பயன்படுத்திய உபகரணங்களை எல்லாம் கைப்பற்றி, ரூபாய் 53 பணமும் கைப்பற்றப்பெற்றுச் சுமார் 10 மணிக்கு ஜே-1 சைதை காவல் நிலையம் கொண்டுவந்து லாக் அப் செய்கிறார். அவர்மீது ஜே-1 குற்ற எண் 307/79-ல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அவசரச் சட்டத்தின்படி இதற்காக ஒரு நபருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், ரூபாய் 7,000 அபராதமும் விதிக்கலாம்; யாரையும் ஜாமீனில் விட முடியாது. அவசரச் சட்டத்தின்படி முதல் குற்றவாளிக்குக் கட்டாயமாக 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 2,000 அபராதமும் விதிக்கலாம். இரண்டாவது, போலீசாருக்கு ஜாமீனில் விட அதிகாரமே இல்லை. ஆனால், இரவு சுமார் 1 மணிக்கு ஒரு முக்கியமான 1 வருடைய இல்லத்திலேயிருந்து தொலைபேசியில் ஆணை வந்து, இரவு, வடிவேலுவுடைய மகன் டி.வி. ராஜேந்திரன் என்பவர் ஜாமீன் கொடுத்து, இந்த மிஸ்ஸி என்ற அம்மையாரைத் தன் பொறுப்பிலே விடுதலை செய்து கொண்டு போகிறார்கள் என்றால், மது விலக்குச் சட்டம் இவ்வளவு அதி தீவிரமாகக் கொண்டுவரப்படுகிற சட்டம், ஆளுங்கட்சிக் காரருடைய தலையீட்டால், கைது செய்யப்பட்ட ஒரு பெண், ஜாமீனில் விட முடியாது. அதுவும் விடுவிக்கின்ற அதிகாரம் போலீசுக்குக் கிடையவே கிடையாது என்று வரையறுக்கப்பட்ட பிறகு, எப்படி ஜாமீனில் விடப்பட்டார்.