பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

உறுப்பினர்களுடைய தொகையை மாத்திரம் பார்த்தால் நல்ல தல்ல. 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி பெற்றிருக்கிற வாக்குகள் 58,48,974. காங்கிரசை எதிர்த்து நின்ற கட்சிகளெல்லாம் பெற்றிருக்கின்ற வாக்குகள் 68,27,372. இதிலிருந்தே, வாக்காளர்கள் மத்தியில் காங்கிரசுக் கட்சி மீது நம்பிக்கை இல்லை என்பது புலனாகிறது. இந்தப் பத்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் 34 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைச் சென்ற தேர்தலில் பெற்றிருக்கிறது. இது திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து வருகின்ற கட்சி என்பதை நாட்டுக்குப் புலப்படுத்து கின்ற ஒன்றாகும். இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கின்ற வாக்குகளை வைத்து, விகிதாசார முறையிலே இடங்களைத் தேர்ந்தெடுப்பது என்று பார்த்தால் எதிர் கட்சிகளுக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்திருக்க முடியும் என்பதை நாம் இந்த நேரத்திலே மறந்துவிடக் கூடாது. ஆகவே, மக்கள் தம் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டு அந்த நினைப்பில் அரசினர் பல்வேறு தவறுகளைச் செய்வார்களானால் அது நல்லதல்ல என்று இடித்துக் காட்டத் தான் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நண்பர் திரு. மதியழகன் அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

முதலில், சர்க்காருக்கும், கட்சிக்கும் இருக்கிற வேறுபாட்டை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாட்டைக் காங்கிரஸ் கட்சியினுடைய சர்க்கார் ஆளுகிறது என்றால் பரவாயில்லை. ஆனால், காங்கிரஸ் கமிட்டியேதான் ஆளுகிறது என்றால், அதுவும் தமிழகத்தைப் பொறுத்த வரையில், குறிப்பாக, திரு. காமராஜரேதான் மறைமுகமாக ஆண்டுகொண்டிருக்கிறார் என்றால் இது உள்ளபடியே குற்றம் சாட்டப்படுவதற்குத் தகுதியான பொருளா? அல்லவா? நான் இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. ஏனோதானோ என்று, 'மறைமுகமாக அவர் ஆளுகிறார்' என்று வார்த்தை அலங்காரத்தோடு முடித்துவிடவும் விரும்பவில்லை. சில நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

18-10-1964 அன்று, உணவுப் பிரச்சினைப்பற்றி விவாதிக்க முதல் அமைச்சர் அவர்களும், அமைச்சர்