560
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்குப்
பாராட்டு
உரை : 78
நாள் : 25.04.1984
கலைஞர் மு.கருணாநிதி : தலைவர் அவர்களே, தாங்கள் இன்று இந்த அவையினுடைய தலைவராக மீண்டும் பொறுப்பேற்று இருக்கையில் அமர்கிற நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு 1972ஆம் ஆண்டு இதே ஏப்ரல் திங்களில் தாங்கள் மேலவைத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற நிகழ்ச்சி என்னுடைய நெஞ்சில் நிழலாடுகிறது. அப்போது கூறிய தங்களைப் பற்றிய சிறப்புரைகளை மீண்டும் நான் இங்கே நினைவுபடுத்துவது, தங்களோடு அந்தக் காலத்திலே விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் என்றாலும்கூட, தங்களைப் போன்றவர்களுடைய வாழ்க்கையை இளைய தலைமுறையினர் தெளிவாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் நினைவூட்டுவது, என்னுடைய கடமையென்று நான் கருதுகிறேன்.
1927ஆம் ஆண்டுதான் தாங்கள் சென்னையிலே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியிலே தங்களை உறுப்பினராக ஆக்கிக் கொண்டீர்கள். அப்படி உறுப்பினராக ஆக்கிக்கொண்ட இரண்டு ஆண்டுகளுக்குள் எல்லாம் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த அந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகத்திலே தாங்கள் பங்குகொண்டு அடக்குமுறைக்கு ஆளாகி போலீசாருடைய தடியடிப் பிரயோகத்தை ஏற்றுக் கொண்டு தங்களுடைய உடலிலே தியாகத் தழும்புகளை, விழுப்