பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

589

யாரும் அதை மறுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட பெருந்தகையாளர் இன்று நம்மிடத்தில் இல்லை என்பது பெரும் குறை. பெரியவர்கள் மறைந்து விடுகிறார்கள் என்றாலும், அவர்கள் தங்களுடைய கொள்கைகளால், கோட்பாடுகளால், பண்பால், பழக்க வழக்கத்தால், பழகுகின்ற எளிமை, இனிமை ஆகியவற்றால் என்றென்றும் நம்முடைய உள்ளங்களிலே நிறைந்து விடுகிறார்கள்.

அவர்களுக்கு நினைவாலயம் ஒன்று எழுப்புவது குறித்தும், சிலை அமைப்பது பற்றியும் டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்டார்கள். வருகிற 15-ம் நாள் அன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் அவர்கள் கிண்டியில், கவர்னர் மாளிகைத் தோட்டத்தில், காந்தியடிகள் மண்டபத்திற்கு அருகாமையில் இராஜாஜி அவர்களுடைய நினைவாலயத்திற்கான அடிக்கல்லை நாட்ட இருக்கிறார்கள். அந்த நினைவாலயத்திலே இராஜாஜி அவர்களுடைய திருவுருவச் சிலையும் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அன்றைக்கே நடைபெற இருக்கிறது. அவர்கள் பிறந்த இல்லம் ஓசூரில் தொரப்பள்ளி என்ற இடத்தில் இருக்கிறது. அந்த இல்லத்தை அரசு வாங்கி மூதறிஞர் இராஜாஜி அவர்களின் நினைவுச் சின்னமாக ஆக்கும் முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை அரசு வாங்குகிறது என்று கேள்விப்பட்டு, உரியவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அதிக விலை தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அது இராஜாஜி அவர்களுக்கு நினைவுச் சின்னமாக அமைவதால் தகுந்த அக்கறை காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இராஜாஜி அவர்கள், தமிழகத்திற்கு, இந்தியாவுக்கு, அனைத்து உலகத்திற்கு வழிகாட்டியாக இருந்தார்கள். இங்கு பேசிய பலரும் குறிப்பிட்டார்கள். மதுவிலக்குப் பிரச்சினையில் இராஜாஜி அவர்கள் காட்டிய தீவிரத்தை எடுத்துச் சொன்னார்கள். அந்தத் தீவிரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், மரியாதை செலுத்துகின்ற வகையில் தமிழ்நாட்டில் மாத்திரமல்ல, அகில இந்தியாவிலும் மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டு வருவார்களானால், இந்திய அரசு அந்த முயற்சியிலே ஈடுபடுமானால் அதற்கு முதலில் கை கொடுக்கின்ற அரசாக நம்முடைய தமிழக அரசு இருக்கும் என்பதை இராஜாஜி அவர்களுடைய பெயரால் எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.