பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இந்த இரங்கல் தீர்மானத்திற்கிடையே நம்முடைய அருமை நண்பரும், இந்த மாமன்றத்தில் முன்னேற்றக் கழக உறுப்பினருமாக இருந்த திரு.கோபால் அவர்களின் மறைவுக்காகக் கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீதும் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். கோபால் அவர்கள் மறைந்த பிறகு அவருடைய குடும்பம் எப்படி இருக்கிறது, குழந்தை குட்டிகள் எப்படிக் கஷ்டப்படுகின்றன, அவருடைய மனைவி ஆசிரியர் தொழில் செய்து குடும்பத்தை நடத்துகின்ற கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நம்முடைய மாண்புமிகு திரு.கே.டி.கே. தங்கமணி அவர்கள் சொன்னார்கள். கோபால் அவர்களுடைய வாழ்க்கை, முன்னேற்றக் கழகத்தின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு என்பதையும் இங்கு தெரிவித்து, அப்படிப்பட்ட அருமை நண்பர் கோபால் அவர்கள் இன்றைக்கு மறைந்துவிட்ட நிலையில் அவருடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை அரசின் சார்பாக இல்லாவிட்டாலும், கழகத்தின் சார்பாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் எடுத்துக் கூறி கோபால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறோம் என்று சொல்லுவதில் பொருள் இருப்பதாகத் தெரிவியவில்லை. ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்ளும் காரியமாகத்தான் அது இருக்கிறது. இராஜாஜி அவர்கள் மறைவுக்காக இரங்கல் தெரிவிப்பது, அனுதாபம் கூறுவதும் தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு மட்டும் செய்யப்படுவது அல்ல. தமிழகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும், இந்தியப் பெருநாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்கும், இராஜாஜியின்பால் அன்பும், மதிப்பும் கொண்டு அனைத்துலக நாடுகளில் இருக்கும் அரசியல் மேதைகளுக்கும் தெரிவிக்க வேண்டிய அனுதாபமாகத் தான் அது இருக்கும் என்பதைத் தெரிவித்து இந்த அளவில் அமைகிறேன், வணக்கம்.