கலைஞரின் சட்டமன்ற உரைகள்
595
இருந்தவருக்கும், மிக நன்றாகத் தெரியும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மானியக் கோரிக்கைகளில் பதில் சொல்லுகிற நேரத்தில் அவரும் திரு.கக்கன் அவர்களும் எல்லோருடைய பெயர்களையும் குறித்து வைத்துக்கொண்டு அவரவர்களுக்குத் திருப்தி ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக எல்லோருடைய பெயர்களையும் ஒருமுறை சொல்லி, அவரவர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்குப் பதில் அளித்தால் அந்தக் கேள்விகளை எழுப்பியவருக்குத் திருப்தி அளிக்கிறதோ இல்லையோ அந்தப் பதில் அளிப்பதால் தங்களுக்கு ஒரு மன ஆறுதல் ஏற்படுகிறது என்ற அளவில் இங்கே நடந்து கொண்ட அமைச்சர்களில் ஒருவராக மறைந்த இராமையா அவர்கள் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்டவரை இன்று நாம் இழந்திருக் கிறோம்.
நேற்று காலையிலே அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று செய்தி கிடைத்தது. மாலையிலே சென்று காணலாம் என்று எண்ணி இருந்தபொழுது அவர் மறைந்துவிட்டார் என்ற நெஞ்சைக் குலுக்கும் செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் இங்கே ஒன்றைச் சொல்லாமலிருக்க முடியாது. அவர் மறைந்த செய்தி அவருடைய கட்சியின் சார்பாகவாவது எங்களுக் கெல்லாம் தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அனைவரும் அங்கே சென்று, அவருடைய புகழுடலுக்கு மலர் வளையம் வைக்கின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கலாம். அந்த வாய்ப்பினை அளிக்காதது, இங்கே அவரோடு பழகினோம் என்ற அளவில் மாத்திரமல்ல. அவருடைய உற்ற நண்பர்களில் ஒருவர் என்ற முறையிலே, அவருடைய பிரிவானது உள்ளபடியே மிகவும் வருந்தத்தக்கது. எனினும் மறைந்தவர் என்றென்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கக்கூடியவர் என்ற முறையிலே அவருடைய குடும்பத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அமர்கிறேன்.