கலைஞரின் சட்டமன்ற உரைகள்
609
பிறந்த நாளில், இந்த முதிய வயதில், முதன் முதலாக யாரைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடினேனோ, அந்த என் அருமைத் தலைவர் மகாத்மா காந்தியடிகளின் நினைவுகூட எனக்கு வரவில்லை; என் அருமைத் தோழர், உயிருக்கும் உயிரான தோழர் ஜவஹர்லால் நேருவின் நினைவுகூட என் நெஞ்சில் ஏறவில்லை; எனக்கு நெருக்கமான உற்றார் உறவினருடைய நினைவுகூட எனக்கு வரவில்லை; ஆனால், எனது அலுவலகத்திற்குச் செல்லும் மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது ஒரேயொரு எளிய உருவம் வந்ததே; அதுதான் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது. அந்த உருவம், திக்கற்ற ஏழைகளையும் நோயாளிகளையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்காக தம் வாழ்வையே ஒப்படைத்துக்கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைக்கின்ற தெரசாவின் மெலிந்த உருவம்" என்று முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பி. சி. ராய் அவர்கள், அவருடைய பிறந்த நாளில் இப்படிக் கூறியிருக்கின்றார்.
-
அந்த அன்னையார் அவர்களை இழந்து உலகமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தங்கபாண்டியனை இழந்து தமிழகமே தாளாத துயரத்திலே ஆழ்ந்து இருக்கின்றது. தங்கவேலை இழந்து குன்னூர் தொகுதி மக்கள் ஆழ்ந்த துயரத்திலே குமுறிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குடும்பங்களுக்கும், இவர்களை ஏற்றிப் போற்றி வாழ்ந்த இந்தியப் பெருமக்கள், தமிழகப் பெருமக்கள் அனைவருக்கும் இந்த அவையின் சார்பில் எடுத்துச்சொல்லப்பட்ட பல்வேறு இரங்கல் செய்திகளோடு என்னுடைய இரங்கல் செய்தியையும் இணைத்து அமைகின்றேன். வணக்கம்.