பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

613

ஆண்டி அம்பலம் மறைவுக்கு இரங்கல்

உரை : 91

நாள்: 30.3.1999

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த மாமன்றத்தில் எதிர் வரிசையில் எந்நேரமும் என்னுடைய பார்வையிலே படுகின்ற அளவிற்கு அமர்ந்திருந்த அன்புக்குரிய நண்பரும், தமிழ் மாநில ல காங்கிரஸ் கட்சியினுடைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஆண்டி அம்பலம் அவர்கள் மறைந்த செய்தி நேற்று காலையிலே கிடைத்தவுடன் நாம் அனைவருமே பதறிப் போனோம். அவை முன்னவரும் கட்சிகளின் தலைவர்களும் எடுத்துக்காட்டியதைப் போல, அடக்கத்தின் மொத்த உருவமாக, நல்ல இயல்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தவர் மறைந்த ஆண்டி அம்பலம் அவர்கள் ஆவார்கள். ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்து எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக்காட்டியதைப் போல, அவருடைய பெயருக்கு ஏற்றாற்போல ஓர் ஆண்டியாகவே அரசியலிலே வாழ்ந்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு.

தொகுதி மக்களிடத்திலே அவர் சார்ந்திருந்த கட்சிக்கு உள்ள செல்வாக்கைவிட தனிப்பட்ட முறையிலே அவருக்குள்ள செல்வாக்கு கட்சிக்கும் பயன்பட்டது என்பதை அவருடைய கட்சியிலே உள்ளவர்களே மறுக்கமாட்டார்கள். அந்த அளவுக்குத் தனிப்பெரும் செல்வாக்கோடும் அந்தத் தொகுதியிலே வாழ்ந்தவர். இன்னமும் அந்தத் தொகுதி மக்களுடைய நெஞ்சங்களிலே மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆண்டி அம்பலம் அவர்கள் ஆவார்கள்.

அவர் அரசியலிலே மாத்திரமல்ல. ஆன்மீகத் துறையி லும், சமுதாயத் துறையிலும் ஆழ்ந்த பற்றுகொண்டு அந்தப் பணிகளிலும், தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருந்தகை