616
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அப்துல் லத்தீப் மறைவுக்கு இரங்கல்
உரை : 92
நாள்: 12.04.1999
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் நண்பர் அப்துல் லத்தீப் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று புரியாத ஒரு நிலையில் நம்முடைய தமிழ்க் குடும்பத்தில் ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று திடீரென்று நின்றுவிட்டது என்பதற்கேற்ப நீண்டகாலம், ஏறத்தாழ 40 ஆண்டு காலம் தமிழக அரசியல் வரலாற்றில் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து அருந்தொண்டாற்றிய என்னுடைய அன்புகெழுமிய நண்பர் அப்துல் சமது அவர்களுடைய மறைவு, இந்த அவையிலே உள்ளவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல, இஸ்லாமியர் அல்லாத தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியாகும்.
அவை முன்னவர் அவர்கள் இங்கே இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தபோது குறிப்பிட்டவாறு மாணவப் பருவத்திலிருந்தே அவர் சார்ந்த இயக்கம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்றாலும்கூட, அவருடைய இயக்கத்தினுடைய தலைவராக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை ஏற்றுக்கொண்டிருந்தார் என்றாலும்கூட, திராவிட இயக்கத்தின் பால் பெரும் மதிப்பும், மரியாதையும், பேரன்பும் கொண்டு தந்தை பெரியாரிடத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களிடத்தில், எங்களிடத்தில் அவர் பழகியவிதம், அவர் வெளிப்படுத்திய பண்பாடு இவற்றை என்றைக்கும் மறக்க இயலாது. கடந்த, 2, 3 ஆண்டு காலத்தில் மாதம் ஒரு முறையாவது அவர் என்னை வந்து சந்தித்திருக்கிறார். பல்வேறு பிரச்சினைகள், தமிழ் நாட்டிலே மனித நேயம் ஓங்குவதற்கும், மத நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் ஆற்ற வேண்டிய காரியங்கள், இவற்றைப் பற்றி எல்லாம் பேசியிருக்கிறார்.