பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

69

தலைவரின் தேர்தல் கடவுளாக இருக்கும் பெரியார் ராமசாமி அவர்களே, இந்த மந்திரி சபை மீது நம்பிக்கையில்லைஎன்று 10-5-1966-ம் நாளை துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்று சொல்லி, துக்க நாள் கொண்டாடிவிட்டு, மறுநாளே காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களே, காங்கிரஸ் கட்சிக்காரர்களே, மறைமுகமாக ஆதரித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். பெரியார் அவர்கள், முதலமைச்சர் அவர்களுடைய மந்திரிசபையைப் பற்றித் துக்க நாள் கொண்டாட வேண்டும் என்று அறிக்கைவிட்ட நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். "காங்கிரசின் பேரில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, வரும் தேர்தலில் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதற்காகப் பக்தவத்சலம் பல காரியங்களைச் செய்கிறார்” என்று பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். உள்ளபடியே காங்கிரசை வாழவைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் அவர்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்காக அவர்கள் பின்னால் இன்றையதினம் காங்கிரசிலே இருக்கும் பலர் போய்க் கொண்டிருக்கிற நேரத்தில், காங்கிரஸ் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு முதல் அமைச்சர் பக்தவத்சலம் இப்படிப்பட்ட காரியங்களிலே ஈடுபடுகிறார் என்று பெரியார் அவர்கள் கூறிவிட்ட பிறகு, உள்ளபடியே உண்மையான காங்கிரஸ்காரர்களுக்கு இந்த மந்திரிசபை மீது நம்பிக்கை இருக்குமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு விடவில்லை பெரியார் அவர்கள், துக்க தினத் தீர்மானமாக ஒரு வாசகம் அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். காமராஜ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, தமது இடத்தில் பக்தவத்சலத்தை முதலமைச்சராக வைத்துவிட்டுப் போனது மாபெரும் - அதற்குமேல் நா வரவில்லை - அவர்கள் சொல்வார்கள் இவர்கள் கேட்டுக்கொள்ளுவார்கள் என்றாலும் - அவர் சொன்னார், 'மாபெரும் முட்டாள்தனமாகும்' என்று. பெரியார் அவர்கள் தன்னுடைய பத்திரிக்கை மூலமாகவும், வேறு ஏடுகள் மூலமாகவும், துக்க தினத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.