கலைஞரின் சட்டமன்ற உரைகள்
93
தலைவர் அவர்களும், இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பும், தொடர்ந்து இந்தச் சர்க்கார் கடைப்பிடித்து வருகின்ற காரியங்கள்தான் என்று எடுத்துக் கூறினார்கள். கண்டனம் யார் மீது என்பதைத்தான் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்த அருமை நண்பர் மாண்புமிகு ௫.ஜெயராஜ் அவர்கள், தீ வைக்கப்பட்டு கொளுத்தப்பட்ட, பெண்டிர், குழந்தைகள், அடிபட்டவர்கள் அத்தனை பேருக்கும் கண்ணீர் வடித்தார்கள். தன்னுடைய ஆழ்ந்த சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அதே நேரத்தில், அப்படித் தீ வைத்துக் கொளுத்திய கொடும்பாவிகளைப்பற்றி ஒரு வார்த்தை கூட அவர் கூறவில்லை. ஆக, அவர்களுடைய கண்டனம் அந்த அளவோடு நின்று விட்டது. சர்க்கார் இந்தச் செயலுக்கு உறுதுணையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். நிலப் பிரபந்தங்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அந்தக் கொடுமைக்குச் சர்க்கார் உறுதுணையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டாரா அல்லது ஏதோ மேலெழுந்தவாரியாக சர்க்கார் உறுதுணையாக இருந்தது என்று சொல்ல வேண்டுமென்று விரும்பினாரா என்று புரியவில்லை
தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல ஆண்டு காலமாகவே விவசாயப் பிரச்சினை இருந்து வருகிறது. அது நாடறிந்த உண்மை. அதைத்தான் நம்முடைய மாண்புமிகு ம.பொ.சி.அவர்களும் தன்னுடைய உரையிலே விவரமாக எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவ்வப்போது தேடப்பட்ட பரிகாரங்களையும் குறிப்பிட்டார்கள். தஞ்சை மாவட்டத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டாண்டுக் காலத்தில் அங்கு ஏற்பட்ட நிலைமை களுக்காக எந்தப் பரிகாரமும் காணப்படவில்லையா? எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளப்படவில்லையா என்பதற்கான கேள்விக்கு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்
1967-ம் ஆண்டு ஜூன் திங்களில் விவசாயப் பிரச்சினை குறித்து ஆராய கீழ்த்தஞ்சையில் ஒரு கூட்டம், மாநாடு என்ற பெயரால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கூட்டப் பட்டது. அதிலே, தொழிலாளர்களுடைய தலைவர்கள்,