பக்கம்:அருகன் அருகே அல்லது விடுதலை வழி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

விருஷபதேவர் முதல் தீர்த்தங்கரர் ; அருகர் முதலிய பெயர்களையுடையவர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 'அஹிம்சா பரமோ தர்ம:' என்ற கொள்கையை உலகில் முதல் முதல் விதைத்த பெருமை அவருக்கு உண்டு. அத் தரும வளர்ச்சிக்கு, அரணாகச் சில சீலங்கள் அவரால் அருளப்பெற்றன. அவற்றுள் ஒன்று - சிறந்த ஒன்று -'மிகுபொருள் உவவாமை' என்பது. இது விருஷபதேவரது அஹிம்சா தர்மப் பொதுமை.

இந்நாளில் பொதுமை யாண்டும் பேசப்படுகிறது. அப் பொதுமை பெரிதும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனடியில் அஹிம்சையும் இல்லை ; ஆன்மார்த்தமும் இல்லை. இவ்விரண்டையும் கொண்ட பொதுமையே இக்காலத்துக்கு வேண்டற்பாலது. இதற்குக் காந்தியம் கலந்த மார்க்சியம் தேவை. காந்திய மார்க்சியத்திற்குத் தாயகம் விருஷபதேவர் போதனை என்பதை மறத்தலாகாது.

அஹிம்சா தர்மப் பொதுமையைப் பொதுவாக நாட்டிலும், சிறப்பாகத் தொழிலாளர் இயக்கத்திலும் பரப்பும் வாய்ப்பு எனக்கு இப்பிறவியில் கிடைத்தது. இக் காலப் பொதுமை நூல்களை யான் படிக்கும்போதெல்லாம் விருஷபதேவர் போதனை என் நெஞ்சை விட்டு அகல்வதில்லை. அவர்மீது கொண்ட அன்பே, 'அருகன் அருகே அல்லது விடுதலை வழி' என்னும் இந்நூலை இயற்றுமாறு என்னை உந்தியது.


யான் எம்மதச் சார்புடையவனும் அல்லன்; மத வெறியனும் அல்லன். எவ்வித வெறியும் என்னை அலைப்பதில்லை. சமயங்களிலுள்ள ஒருமையை வலியுறுத்துவது எனது வழக்கம். அவ்வொருமை, 'சன்மார்க்கம்' என்று வழங்கப்படுகிறது. உலகமும் ஆன்மார்த்தமும் கலந்த ஒன்றே சன்மார்க்கம் என்பது. இச்சன்மார்க்கத்தைப் பொதுமை என்றோ சமரசம் என்றே கூறலாம். சன்மார்க்கம், சாதி மத நிற மொழி நாடு முதலியவற்றைக் கடந்தது. அஃது உலகுக்கு உரியது; உலகை ஒருகுலமாக்க வல்லது. அதை அறிவுறுத்திய குருமார் அனைவரையும் பொதுமுறையில் போற்றவேண்டுமென்பது எனது வேட்கை. அவ்வேட்கையினின்றும் பிறந்த நூல்களுள்