பக்கம்:அருமையான துணை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயம்

செந்திக்கு இரவு நேரங்களில் தெருவில் நடக்கவே பயம். தெரு நாய் ஏதாவது பாய்ந்து வந்து காலைக் கவ்வி விடும், மேலே விழுந்து கடித்துக் குதறிவிடும் என்று அவன் மனம் சதா அஞ்சி நடுங்கும்.

இதுவரை அவனை நாய் எதுவும் கடித்தது இல்லைதான். அதற்காக, இனிமேல் என்றைக்காவது நாய் கடிக்காது என்று உறுதியாய் எப்படிச் சொல்ல முடியும்? அவன் மனசில் எப்போதும் இந்த உதைப்பு இருந்து வந்தது.

செந்தியை நாய் கடிக்கும் என்று அவனது ஜாதகத்தைப் பார்த்த எந்தச் சோதிடரும் சொன்னரோ இல்லையோ தெரியாது. அவனுடைய பாட்டியும், அத்தையும், பெரியம்மாவும் சின்ன வயது முதலே அவனுக்கு நாயை எண்ணிப் பயப்படும்படி கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.

செந்தியின் தாத்தா செந்தில்நாயகம் பிள்ளை நாய் கடித்து, நாற்பது நாட்கள் கஷ்டப்பட்டு, நாய்மாதிரிக் குரைத்துக்கொண்டே செத்துப்போனார். அந்தக் காலத்தில் நாய் கடித்தால் ஊசி குத்திக்கொள்கிற பழக்கம் இருந்ததில்லை.

செந்தியின் மாமா செந்திக்குமார பிள்ளையை கோட்டி நாய் ஒன்று கடித்துவிட்டது. அவரும் ரொம்பவும் கஷ்டப்பட்டார். எத்தனையோ 'பண்டுவம்-பக்குவம்' எல்லாம் பார்த்ததில் குறை இல்லை. இருந்தாலும் சாகிறவரை அவருக்கு ஒரு மாதிரியான இரைப்பு இருந்தது. அமாவாசைகளில் வாயோரம் நுரை கக்கிக்கொண்டு, மயக்கமாகக் கிடப்பார். ஒரு இழுப்பு நோய் வந்தது. முடிவில் சாவு அவருக்கு விடுதலை அளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/108&oldid=1318166" இலிருந்து மீள்விக்கப்பட்டது