பக்கம்:அருமையான துணை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பயம்

101

என்று பெயர் உடையவர்களே; தாத்தா பெயர்தான் தனக்கும் இடப்பட்டுள்ளது; எனவே, செந்தில்நாயகமான தானும் என்றைக்காவது ஒருநாள் நாய்க்கடிக்கு ஆளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...

தாத்தா பெயர் இடப்பட்டிருப்பதனாள், தானும் செந்தி என்று பெயர் பெற்றிருப்பதால் தன்னையும் நாய் ஏன் கடிக்க வேண்டும் என்று அவன் தன்னையே கேட்டு, அறிவின் துணையோடு தைரியம் அடைவதற்குப் பதிலாக, அர்த்தமற்ற-தெளிவற்ற-இனம்புரியாத மன உளைச்சலுக்கும் ஒருவித பயத்துக்கும் ஆளாகி வந்தான், சிறுவயசிலிருந்தே.

சிறு வயது முதலே நாயிடம் அவனுக்கு உள்ள பயம் வளர்வதற்கான சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

சோறு வேண்டாம் என்று அடம்பிடிக்கும் சிறுவனை அவனுக்கு போக்குக்காட்டி சாதம் ஊட்டுவதற்காக அவனுடைய அம்மா, 'தோ தோ தோக்குட்டி! துரைமார் வீட்டு நாய்க்குட்டி! சின்னதுரை வேட்டைக்குப்போறான், நீயும் கூடப் போ நாய்க்குட்டி!' என்று ராகமிழுத்து நீட்டி முழக்குவது வழக்கம், ஒரு நாய் அந்தப் பக்கம் வந்து வாலே ஆட்டிக்கொண்டு நிற்கும். சோற்றுக் கவளத்தை அதற்குப் போடுவதுபோல் காட்டி, 'இந்தா பாரு, நாயி புடுங்கிக்கிடப் போகுது! நீ சாப்பிட்டுவிடம்மா’ என்று தன் இடுப்பில் இருக்கும் செந்தியைக் கெஞ்சிக் குழையடித்து வாயில் சோற்றை ஊட்டிவிடுவாள். கடைசிவரை நாய்க்குச் சோறு போடாமலே இருந்துவிடுவாள். சில சமயம் கொஞ்சம் போட்டாலும் போடுவாள்.

ஒரு சமயம் அவள் குரலைக் கேட்டு வேறொரு நாய் வந்தது. எதிர்பார்த்தபடி நின்றது. கண்களில் ஏக்கம் படர அவள் கையையும் செந்தியின் வாயையும் கவனித்துக் கொண்டிருந்தது. அவள் சோறு போடமாட்டாள் என்று அதன் உணர்வு அதற்குப் புலப்படுத்தவும், அந்தத் தடி நாய் 'உர்ர்’ என்று உறுமிக்கொண்டு, அம்மாவின் இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/110&oldid=1306785" இலிருந்து மீள்விக்கப்பட்டது