பக்கம்:அருமையான துணை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அருமையான துணை


அப்படி இருந்து விடுவதா?-சுயம்புலிங்கத்தின் மனக்குரல் ஓயாது கீச்சிட்டுக் கொண்டிருந்தது இப்படி.

அப்படி மன அரிப்பைப் பெறுகிறவர்கள் செய்யக் கூடிய காரியங்கள் மூன்று உண்டு என அவன் தேர்ந்தான். மேடை போட்டுக் கூட்டம் கூட்டி முழக்கம் செய்யலாம். நாட்டு மக்களிடையே அறிவொளி கொளுத்தத் தூண்டி, தன் இதய ஒலியை எடுத்துச் சொல்ல, ஒரு பத்திரிகை நடத்தலாம். தனிக்கட்சி ஒன்று ஆரம்பிக்கலாம். தனி மேடை போட முடியாதவர்கள், தனிக்கட்சி காணப் போதிய பலம் (சகல விதமான பலங்களும்) இல்லாதவர்கள், இதர கட்சிகளின் நிழலில் ஒதுங்கி, தங்கள் கர்ஜனை, முழக்கம், உறுமல், சிம்மக்குரல், இடியோசை வகையராவை உதிர்ப்பதும் இயல்பாக இருக்கிறது.

மேடை, கட்சி, பத்திரிகை, மூன்று சக்திகளையும் ஒரு நபரே நிர்வாகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதும் தெரிகிறது.

ஆனால், அப்பாவி சுயம்புலிங்கத்தினால் அப்படி எல்லாம் செய்ய இயலாது.

எனவே, அவன் ஒரு பத்திரிகை ஆரம்பித்தான். எப்படியோ கடன்-கிடன் வாங்கி, ‘அண்டாவைத் தூக்கிக் குண்டானிலே போட்டு, குண்டானைத் தூக்கி அண்டாவிலே போட்டு’ உருட்டும் புரட்டும் பண்ணி, பத்திரிகை தடத்தப் போதுமான பணம் சேர்த்துக் கொண்டான்.

அவனுடைய பத்திரிகையின் முதல் இதழைப் பார்த்ததும் பலரும் பல விதமாகப் பேசத்தான் செய்தார்கள்.

‘நாங்கள் அப்போதே சொல்லவில்லையா? அவன் சரியான முட்டாள். அதை விளம்பரப்படுத்துகிறது. இது' என்று சிலர் சொன்னார்கள்.

‘அவன் புத்திசாலி என்பதை இது காட்டுகிறது' என்று சிலர் பேசினார்கள்.

அவன் மகா புத்திசாலியா, ‘மாங்கா மடையனா' என்று தீர்மானிக்க முடியாமல் திணறியவர்களும் இருந்தார்கள். எல்லோரும் அவனுக்கு நல்லுரை கூறி உதவினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/29&oldid=970321" இலிருந்து மீள்விக்கப்பட்டது