பக்கம்:அருமையான துணை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அருமையான துணை


’ஆகா, ரொம்பக் கரிசனம்தான்! நான் நல்லாயிருக்கணும்னு நீங்க யாராவது நினைச்சது உண்டா? எனக்குப் பெண் பார்த்துக் கல்யாணம் நடத்தணும்னு எந்த அக்கா அல்லது அத்தை அல்லது பெரியம்மா சின்னம்மா முன் வந்தா? மீனாச்சி அத்தைதான்-அவதான் தங்கத்தோடே அம்மா-பரிவோடு விசாரித்து, செய்யவேண்டியதை தன்னால் ஆனதைச் செய்தா. எப்பவும் எனக்கு நல்லது விரும்புகிறவ அவதான். அவளிடம் இருக்கிற மனிதாபிமானம் உங்ககிட்டே இல்லையே!’ என்று கூறிச் சிரித்தான் அவன்.

’தூ’என்று காறித் துப்பினாள் அக்காக்காரி.

அது அவனை எதுவும் செய்துவிடவில்லை. அந்த ஊரில் இவனுக்கென்று இருந்த ஒரே உடைமையான சிறு வீட்டை அவன் விற்பனை செய்தான், அங்கிருந்தே போய்விட்டான்.

'அவன் உருப்படுவான்கிறியா? இந்தப் பணத்தை நாசமாக்கிப் போட்டு நடுத்தெருவிலே நிற்கப் போறான் பாரு!' என்று பேசிக்கொண்டார்கள் அவ்வூர் பெண்மணிகள்.

அவர்களது 'பத்தினி வாக்கு’ பலிக்கவில்லை.

சொக்கலிங்கம் வீடு விற்ற பணத்தை முதலாக வைத்து "சைவாள் சாப்பாட்டு கடை’ ஒன்று ஆரம்பித்தான். ’காப்பி, டீ, பலகாரமும்’ உண்டு. அவனது மீனாட்சி அத்தை சொன்ன யோசனைதான் அது. ஒட்டல் தொழிலில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவள் அவள்.

அவர்களுடைய உழைப்பு வீண் போகவில்லை. சொக்கையாவின் வாழ்க்கையில் குறை எதுவும் தலைகாட்டிவிடவில்லை.

சாந்தி, செப்டெம்பர் 1973

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/41&oldid=1242885" இலிருந்து மீள்விக்கப்பட்டது